சோகத்தில் முடிந்த ஐ.டி. இளைஞரின் லட்சியப் பயணம் – பாதியிலேயே கலைந்த குமரி டூ காஷ்மீர் கனவு

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் போர்டிலேயே பயணம் செய்யும் லட்சியத்துடன் சென்ற இளைஞர், தனது கனவை அடைய இன்னும் சில கிலோ மீட்டர் தூரங்களே இருந்தநிலையில், ட்ரக் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாறமூடு அருகேயுள்ள புல்லம்பாற அஞ்சாம்கல் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான அனாஸ் ஹஜாஸ். கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்ற அனாஸ் ஹஜாஸ், அதன்பிறகு டெக்னோ பார்க் என்ற ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட அனாஸ் ஹஜாஸ் பின்னர் பீகாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் மாடலிங், வீடியோ எடிட்டர், மார்க்கெட்டிங், பழக்கடை என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் அனாஸ். ஆனால் இந்த வேலைகள் எதிலும் மகிழ்ச்சி தராதநிலையில், பீகாரில் பணிபுரிந்தபோது அறிமுகமான ஸ்கேட்டிங் மீது அனாஸ்-க்கு தீராத காதல் வந்துள்ளது.
இதையடுத்து முமுநேரமும் ஸ்கேட்டிங் மற்றும் சுற்றுப்பயணம் செய்வதிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார் அனாஸ். யாரிடமும் ஸ்கேட்டிங் போர்டு பழகுவது குறித்து கற்றுக்கொள்ளாமல், சொந்தமாக கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஸ்கேட்டிங் போர்டு வாங்கி, யூ-ட்யூப் பார்த்தே சுயமாக கற்றுக்கொண்டுள்ளார் அனாஸ். அத்துடன் அக்கம் பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார் அனாஸ்.
image
இதனைத் தொடர்ந்து ஸ்கேட்டிங் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3511 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் போர்டிலேயே பயணம் செய்ய முடிவு செய்த அனாஸ், கடந்த மே 29-ம்‌ தேதி கன்னியாகுமரியில் இருந்து தனதுப் பயணத்தை துவங்கியுள்ளார். தொடர்ந்து இரண்டு‌ மாதங்கள் வெற்றிகரமாக தனது லட்சியத்தை நோக்கி பயணித்த அனாஸ் சில நாட்களாக ஹரியானா மாநிலத்திலிருந்து ஹிமாச்சல் பிரதேசம் நோக்கி பயணித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளதாகவும், இன்னும் சுமார் 15 நாட்களில் 600 கிலோ மீட்டர் தூரம் உள்ள காஷ்மீரை அடைந்து தனது சாகசப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார் அனாஸ். அத்துடன் தற்போது ஒருநாளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வரைதான் ஸ்கேட்டிங்கில் பயணம் செய்வதாகவும், தான் நலமுடன் இருப்பதாகவும், அனைவருக்கும் நன்றி என்றும் ஃபேஸ்புக்கில் வீடியோவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
image
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, ஹிமாச்சல் பிரதேசம் நலகார்க் நோக்கி ஹரியானா மாநிலம் பிஞ்ஜோரிலிருந்து ஸ்கேட்டிங் போர்டில் பயணித்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக எதிரே வந்த ட்ரக் அவர்மீது எதிர்பாரதவிமாக மோதியதில் அனாஸ் இரத்தகாயங்களுடன் மயங்கியுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு உடனடியாக தூக்கிச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அனாஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 600 கி.மீ தொலைவில் தனது லட்சியத்தை அடையும் ஆசையில் இருந்த அனாஸின் கனவு நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ட்ரக் வண்டி எண்ணை, சம்பவ இடத்தில் இருந்த மக்கள் அங்குள்ள பிஞ்ஜோர் காவல்நிலையத்தில் கொடுத்துள்ளனர். தொடர்ந்து அனாஸ் ஹஜாசின் உடல் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நண்பர்களுக்கு செல்ஃபோன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனஸ் ஹஜாசின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் ஹரியானா சென்றுள்ளனர். அனாஸ் ஹஜாஸ் ஸ்கேட்டிங் போர்டு பழகுவதை ஆரம்பத்திலேயே, அவரின் பெற்றோர்களான அலியார் குஞ்ஞு – ஷைலா பீவி தம்பதி விரும்பாமல் இருந்துள்ளனர். ஆயினும் மகனின் ஆசைக்காக பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
image
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான ஸ்கேட்டிங் பயணம் முடிந்ததும், நேபாளம், பூட்டான், கம்போடியா ஸ்கேட்டிங்கிலேயே பயணம் செய்ய அனாஸ் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் குமரி முதல் காஷ்மீர் வரையான ஸ்கேட்டிங் பயணம் குறித்து அனாஸ் சரியாக திட்டமிடவில்லை எனவும், இந்த லட்சியப் பயணம் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னர்தான் பெற்றோரிடம் அனாஸ் தெரிவித்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்துக்கு 2 செட் துணிகள், ஒரு ஜோடி ஷு மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை மட்டுமே அனாஸ் எடுத்துச் சென்றுள்ளார். முதலில் ஒருநாளில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் சென்ற அனாஸ், தனது நண்பர்கள் வலியுறுத்தலின்பேரில், பின்னர் அதனைக் குறைத்துக்கொண்டு ஒரு நாளில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே சென்றதும், அதிவேகத்தில் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.