ஆலப்புழா: கேரளத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து, மாணவர்களுக்கு ஆலப்புழா எழுதியுள்ள முன்னெச்சரிக்கை பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். கனமழையினால் எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு மாவட்டங்களில் ஆலப்புழாவும் ஒன்று.
கனமழை பெய்து வருவதால், கேரள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் வி ஆர் கிருஷ்ண தேஜாவின் விடுமுறை அறிவிப்பு பதிவு இப்போது வைரலாகி உள்ளது. ஆலப்புழா கலெக்டராக சில நாட்கள் முன்பு தான் பொறுப்பேற்றுகொண்ட தேஜா கனமழையை அடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். நெட்டிசன்களைக் கவர்ந்த அந்தப் பதிவின் தமிழாக்கம் உங்களுக்காக…
“அன்புள்ள குழந்தைகளே, நான் ஆலப்புழா கலெக்டராக பொறுப்பேற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது முதல் ஆர்டர் உங்களுக்காக, உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளேன். விடுமுறை என்பதற்காக அருகில் உள்ள குளங்கள், ஏரிகளில் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ செல்ல வேண்டாம். மாவட்டம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் இல்லை என்று நினைத்து வெளியே சுற்றுவதற்கு செல்ல வேண்டாம். ஏனென்றால், தொற்று நோய்கள் பரவிவருகிறது. எனவே, மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள். விடுமுறையில் சும்மா இருக்காதீர்கள். உங்கள் பாடங்களை நன்றாகப் படித்து புத்திசாலியாக மாறுங்கள்” என்று கலெக்டர் கிருஷ்ண தேஜா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.