ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியதால், இதன் நீர்தேக்கப் பகுதியின் ஓரங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்த வயல்களில் தண்ணீர் வெகுவாய் சூழ்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், வைகையின் துணை ஆறுகளான மஞ்சளாறு, பாம்பாறு, சுருளி ஆறு,கொட்டக்குடி, வராகநதி, வரட்டாறு உள்ளிட்டவற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்தது. மேலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் நீர் தொடர்ந்து திறந்துவிடப்பட்டுள்ளதால் இன்று நீர்மட்டம் 70 அடியை எட்டியது.
முழுக் கொள்ளவை எட்டினால் 6,091 மி. கனஅடி நீரைத் தேக்க முடியும். தற்போது 5,829 மி.கனஅடி அளவிற்கு நீர் தேங்கி உள்ளது. இதனால் வைகை அணையில் தண்ணீர் கடல்போல் விரிந்து பரந்து தேங்கி உள்ளது. இந்த நீர் தேக்கப்பகுதியில் வடவீரநாயக்கன்பட்டி, சொக்கத்தேவன்பட்டி, பின்னத்தேவன்பட்டி, வீரசின்னம்மாள்புரம், மதுராபுரி, அழகாபுரி, அம்மாபுரம், சர்க்கரைப்பட்டி, சாவடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டுமே முழுக்கொள்ளவை எட்டுவதால் நீர்தேக்கத்தின் ஓரப்பகுதிகள் வறண்டே காணப்படும். ஆகவே பலரும் இப்பகுதியை ஆக்கிரமித்து வெண்டை, தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்களும், வாழை, தென்னை உள்ளிட்ட மரப்பயிர்களையும் வளர்த்து வருகின்றனர்.
68 அடிக்கு மேல் நீர்மட்டம் உயரும்போதுதான் இப்பகுதிகளில் நீர் தேங்கும். தற்போது 70 அடியை எட்டியுள்ளதால் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, காமக்காபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையைத் தவிர்க்க பொதுப்பணித் துறையினர் நீர்தேக்கப் பகுதி எல்லைகளை சர்வே செய்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஆக்கிரமிக்கப்பட்ட வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அரசின் எந்த வகையான இழப்பீடையும் பெற முடியாது” என்றனர்.