முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படும் என தான் நம்புவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் என்ற வகையில், சட்டமா அதிபரிடம் இருந்து வழக்குச் சுருக்கங்களைப் பெற்றதாகவும், நெறிமுறையின்படி தனது பரிந்துரைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தனி அதிகாரம் என்பதால், அவருக்கு எப்போது மன்னிப்பு வழங்க முடியும் என கணிக்க முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது.
ரஞ்சனுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு
ஐந்து வருடங்களுக்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி நீதித்துறைக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அலரிமாளிகையில் அப்போதைய பிரதமர் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ராமநாயக்க, நாட்டில் உள்ள பெரும்பான்மையான நீதிபதிகள் பக்கச்சார்பான தீர்ப்புகளை வழங்குவதாகவும் அவர்கள் ஊழல்வாதிகள் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா மற்றும் வண. மாகல்கந்தே சுதத்த தேரர் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
இது போன்ற அவதூறு கருத்துக்கள் பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்து, இலங்கை மக்களுக்கு நீதித்துறை பற்றிய ஒரு திரிக்கப்பட்ட பிம்பத்தை அளிக்கும் என்று குற்றம் சாட்டியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.