தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் நிலையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
சனிக்கிழமையன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறவாளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM