சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தற்போதைக்கு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியின் மீது அதிருப்தி தெரிவித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 37 எம்எல்ஏக்கள் கொண்ட அணி பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைத்தது. தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியே நடந்து வருகிறது.
இந்நிலையில் உண்மையான சிவசேனா தாங்கள்தான் எனவும், சிவசேனா கட்சியின் தேர்தல் சின்னத்தை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என உரிமை கோரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது.
இந்த முறையீட்டு மனுவை எதிர்த்து முன்னால் முதல்வரான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏக்நாத் ஷிண்டே தரப்பில் அளிக்கப்பட்ட மனு தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்து, மறு உத்தரவு வரும் வரை எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM