புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் 3,700 சீட்டுகளுக்கு, இந்தாண்டு 3.86 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். எனவே, சீட்டுகளைஅதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இளநிலை, முதுநிலை, பிஎச்.டி., படிப்புகளில், 115க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம், அகில இந்திய அளவில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது.
‘கியூட்’ நுழைவுத்தேர்வு
இந்தாண்டு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான 10 படிப்புகளுக்கு மட்டும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டு, விண்ணப்பம் பெறப்பட்டது.பின்னர், மற்ற முதுநிலை படிப்புகளுக்கும் கியூட் தேர்வு மூலமே சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவியர் போட்டி போட்டிக் கொண்டு விண்ணப்பித்தனர்.பல்கலைக் கழகத்தில் முதுநிலை படிப்புகளில் மொத்தம் 3,700 சீட்டுகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு சராசரியாக ஆண்டிற்கு 40 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும்.
3.86 லட்சம் விண்ணப்பம்
ஆனால் இந்தாண்டு மத்திய பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ நுழைவு தேர்வில் புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டது. அதனால், மொத்தமுள்ள 3,700 சீட்டுகளுக்கு 3 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பிற்கு 97 ஆயிரம் விண்ணப்பங்களும், மற்ற முதுநிலை படிப்புகளுக்கு 2,89,000 விண்ணப்பங்கள் குவிந்து, மலைக்க வைத்துள்ளது.
சீட் அதிகரிக்க முடிவு
இந்தாண்டு விண்ணப்பங்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளதால் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க துணைவேந்தர் குர்மீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து, எந்த பாடப் பிரிவுகளில் சீட் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என பல்கலை நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இட ஒதுக்கீடு தொடருமா?
புதுச்சேரியில் இல்லாத படிப்புகளில் 25 சதவீத இடங்களை, இம்மாநில மாணவர்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டு, 1997ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.பல்கலைக் கழகத்தில் 22 பாடப்பிரிவுகளில் மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 10 இளநிலை படிப்புகள் ‘கியூட்’ தேர்வுக்கு சென்றதால் 3 பாடப்பிரிவுகளில் இட ஒதுக்கீடு பறிபோய் விட்டது. அதனால், புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 19 பாடப்பிரிவுகளாக குறைந்துபோய் உள்ளது. இச்சூழ்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை படிப்புகள் அனைத்துமே மத்திய கியூட் நுழைவுத் தேர்வுக்கு சென்றுள்ளதால், புதுச்சேரி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடருமா என்பதை, மாணவர் சேர்க்கைக்கு முன்பாக பல்கலைக்கழக நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும்.
இரண்டாம் கட்ட தேர்வு
ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகளுக்கு மட்டும் ஏற்கனவே முதற்கட்ட ‘கியூட்’ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்தது.இந்த சூழ்நிலையில் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு நேற்று துவங்கியது. காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக தேர்வு நடந்தது. வரும் 21ம் தேதி வரை இத்தேர்வு தொடர்ந்து நடக்கின்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்