கேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கேரளாவில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் சாலைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் கன்னூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தை தவிர பிற மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை 3 மணிக்குள் பம்பை சென்றுவிட வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் சுவாமி தரிசனம் முடித்ததும் மாலை 6 மணிக்குள் பம்பையை கடந்து விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM