காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மாதம் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியபோது டெல்லி உள்பட நாடு முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, கடந்த வாரம் சோனியாவிடம் விசாரணை நடத்தியபோதும் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைவர்கள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலக வளாகத்தில் உள்ள யங் இந்தியா ஹவுஸ் அலுவலக பகுதியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 3-ம் தேதி பூட்டி சீல் வைத்தனர். அனுமதி இன்றி அலுவலக வளாகத்தைத் திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, “வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின்கீழ் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு ஹவுஸ் கட்டடத்தில், யங் இந்தியா நிறுவனம் இயங்கி வந்த அலுவலகப் பகுதி மட்டும் தற்போது தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கும்போது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை.
சீல் வைக்கப்பட இருந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அலுவலக வளாகத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் ஒரு பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் உத்தரவின்றி யாரும் அந்த சீலை அகற்றக் கூடாது” என்று அதிகாரிகள் வட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சோனியா காந்தி வீட்டின் முன்பும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலக வளாகத்திலும் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வை ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ், ஆகஸ்ட் 4 -ம் தேதி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அனைத்து கட்சி எம்.பி-க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் காங்கிரசின் வரும்கால உத்தி குறித்து விவாதிக்கலாம் என்கிறார்கள்.
இது குறித்து டெல்லி காங்கிரஸ் தரப்பில் நாம் விசாரித்த போது, “அறிவிக்கப்படாத எமர்ஜென்சி’ என்று கூறினார்கள். ஆனால், எமர்ஜென்சியில் கூட நிர்வாகம் சரியாக இருந்தது. இப்போது நிர்வாகமே இல்லாமல் முழுக்க முழுக்க சர்வாதிகார போக்காக இருக்கிறது. ‘எங்கள் அனுமதி இல்லாமல் திறக்கக்கூடாது’ என அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள். இதை நாங்கள் சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தில் அணுகப் போகிறோம். இந்த விவகாரத்தை வைத்து நள்ளிரவில் கைது செய்வதற்கான முன்னெடுப்பும் எடுத்தார்கள். ஆனால், கைது செய்தால் தங்களுக்கு எதிர்மறையாக வந்துவிடுமோ என்று ஆலோசித்து தவிர்த்திருக்கிறார்கள்” என்றவர்களிடம் ‘கைது செய்வதற்கான முகாந்திரம் இதில் என்ன இருக்கிறது?’ என்கிற கேள்வியினை முன் வைத்தோம்.
“இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், குஜராத் கோத்ரா சம்பவம் குறித்து இரண்டு பேர் வழக்குத் தொடுக்கிறார்கள். ‘நீங்கள் எப்படி வழக்குத் தொடுக்கலாம்’ என்று இன்று அவர்கள் மீதே வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். எனவே எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று முகாந்திரம் இருக்கிறதோ இல்லையோ அதைப் பற்றி கவலை இல்லாமல் கைது செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு. பா.சிதம்பரத்தைக் கூட எஃப்.ஐ.ஆர் இல்லாமலே 100 நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள்.
பொதுவாக அமலாக்கத்துறையில் தகவல் துறை என்று ஒரு பிரிவு இருக்கும். அதன் அடிப்படையில் தான் விசாரிப்பார்கள். ஆனால், சமீபத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் ‘அமலாக்கத்துறை விசாரணையில் கைது செய்யக் கூடாது’ என்று வழக்குத் தொடுத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு வழக்கில் நான்கு நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போது ‘அமலாக்கத்துறையினரும் கைது செய்யலாம்’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னணியில்தான் எங்கள் தலைவர்கள் மீது கைது செய்வதற்கான முன்னெடுப்பு எடுத்தார்கள். ஆனால், அது கை கூடவில்லை. எது எப்படி இருந்தாலும் பா.ஜ.க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நாங்கள் ஜனநாயக ரீதியாக எதிர்கொள்வோம்” என்கிறார்கள் டெல்லி காங்கிரஸார்.