செம்மரம், செர்ரி, அத்தி, பலா… `இப்படியொரு மரம் வளர்ப்பு பண்ணையை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!'

விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட பலரும், இயற்கை முறையில் நெல் சாகுபடி, கொய்யா சாகுபடி, மலர் சாகுபடி என அசத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் இணைகிறார் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றும் ராஜீவ்காந்தி. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டைக்கு அருகிலுள்ள, காளிகாபுரம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை முறை வாழ்க்கை மற்றும் மரங்களின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக மர விவசாயமும் அதனுடன் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயமும் செய்து வருவதாக கூறும் அவர், தன்னுடைய இயற்கை விவசாய அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ராஜீவ் காந்தி

“நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். வழக்கறிஞரான எனது தந்தை 15 வருடங்களுக்கு முன்பு 15 ஏக்கர் நிலத்தில் பல்வேறு மரங்களை நடவு செய்து பராமரித்து வந்தார். எனக்கும் பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே மரங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது. நானும் என்னுடைய நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘நிழல்கள்’ என்ற ஒரு குழுவை ஆரம்பித்து அதன் மூலம் நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நாட்களில் நாங்களே மரங்களை குறிப்பிட்ட அளவு வளர்த்து அதன் பின் எங்கள் கிராமத்தின் பள்ளி வளாகம், எரிக்கரைகளில் மரங்களை நட்டு வருகிறோம். என்னுடைய கல்லூரி காலத்திலும் நண்பர்களுடன் இணைந்து செங்கல்பட்டு சட்ட கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டேன்.

பள்ளி, கல்லூரி, வழக்கறிஞர் பணி என இன்றளவும் எங்களுடைய ‘நிழல்கள் ‘குழுவின் மூலம் மரம் நடும் பணியை விடாது செய்து வருகிறேன். எங்களிடம் மொத்தம் 15 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் அதிகளவு லாபம் தரக்கூடிய மரங்களான செம்மரம், தேக்கு, மரங்கள் மட்டுமன்றி தெய்வீக தன்மையுடைய மரங்கள், செர்ரி, ஸ்டார் ப்ரூட், அத்திப்பழம் போன்ற பழ மரங்கள், மூலிகைத் தன்மையுடைய செடிகள், பல வகையான விலங்குகள் மற்றும் பறவை இனங்களையும் எங்கள் பண்ணையில் வளர்த்து வருகிறோம்.

மரம்

எங்கள் தோப்பில் மாமரங்களின் நடுவில் ஒரு கொய்யா மரமும் வளர்த்து வருகிறோம். மாமரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை செய்கிறோம். மாமரத்திலிருந்து வருடம் 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. கொய்யாவில் ஒவ்வொரு வருடத்திற்கும் 50,000 வரை வருவாய் கிடைக்கிறது. சப்போட்டாவில் வருடம் 5,000 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. குளிர் பிரேதேசங்களில் மட்டும் வளரக்கூடிய மரங்களையும் எங்கள் தோட்டத்தில் வளர்க்கிறோம். இந்தச் செடிகளை பராமரிக்க, கன்று நடப்பட்ட மூன்று வருடகாலத்திற்கு வெயில்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பனைமட்டை, தென்னைமட்டையை வைத்து செடிகளை வெயில் படாமல் பார்த்துக்கொண்டால் போதும். மூன்று வருட காலத்திற்கு பிறகு அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். மல்சிங், மூடாக்கு முறைகளை சரியாக பின்பற்றினால் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய பழ மரங்களையும் நல்ல முறையில் வளர்த்து மகசூல் பெறலாம். செம்மரம் தேக்கு போன்ற மரங்கள் பல லட்சங்கள் விலை போக கூடியது. இன்னும் 20 வருடங்களில் இந்த மரங்களில் இருந்து லட்சக்கணக்கில் வருவாய் பார்க்கலாம்.

இளம் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி

மர விவசாயத்தில் கவனிக்க வேண்டியவை

மரங்களை நடும்போது குறைந்தபட்சம் 15 அடி இடைவெளியாவது விட வேண்டும். ஒரேவகையான மரங்களை தொடர்ச்சியாக நடவு செய்யக் கூடாது. மாற்றி மாற்றி நடவு செய்தால்தான் மரங்களுக்கிடையே போட்டியின்றி சரிவர வளர்ச்சி பெறும்.

மர விவசாயத்தில் பலருக்கும் ஆர்வமிருக்கிறது. ஆனால் எந்த மரம் எந்த நிலத்தில் வளரும் என்பது போன்ற மரங்கள் பற்றிய சரியான தகவல்கள் மரம் வளர்க்க விரும்புவோர்க்கு தெரிவதில்லை. உதாரணமாக தேக்கு மரத்தை எடுத்துக்கொண்டால் தேக்கு மரம் நீர் அதிகளவு தேங்கி நிற்கக்கூடிய இடங்களில் வளராது இறந்துவிடும். மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்து நட்டால் மரங்களை நன்றாக வளர்க்கலாம்.

நீங்களும் செம்மரம் வளர்க்கலாம்

தேக்கு மரம் ஒரு டன் ₹20,000 தான். ஆனால் செம்மரத்தின் மதிப்பு ஒரு டன் இந்திய மதிப்பில் 20 லட்சம் வரை போகிறது. இதையே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் ஒரு டன் 50 லட்சம் என்ற அளவில் இதன் விலை மதிப்பு அதிகம். செம்மரத்தை நமது சொந்த பட்டா நிலத்தில் வைக்கலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும், இது சட்டப்பூர்வமாக நமது சொந்த நிலத்தில் வளர்க்கலாம்.

செழித்து காணப்படும் மா

அரசாங்கமே செம்மர கன்றுகளைக் கொடுத்து வளர்க்க ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாம் செம்மரம் வளர்ப்பதை கிராம நிர்வாக அலுவலகத்தில் எத்தனை மரங்கள் வளர்க்கிறோம் என்பதை பதிவு செய்ய வேண்டும். மேலும் இதை விற்க வேண்டும் என்றால் கூட அரசாங்கத்திடம் பதிவு செய்து அரசிடம் தான் விற்க வேண்டும். விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அவர்களே வாங்கிக் கொள்வார்கள். எனவே அனைவரும் செம்மரம் வளர்க்கலாம்.

செம்மரம் எளிதில் வளரக்கூடிய ஒரு மரம்தான். வறட்சி தாங்கி வளரக்கூடியது. ஆனால் இதற்கு உகந்த இடம் நீர்த்தேங்காத செம்மண் பகுதி தான். மலையடிவாரங்களில் நல்ல தரமான ஒரு மரமாக இது வளரும். இந்த செடியை நடவு செய்த இரண்டு வருடத்தில் மேல்மட்ட வளர்ச்சியே இருக்காது.

செர்ரி பழம்

பனைமரத்திலும், செம்மரத்திலும் இரண்டு வருடத்திற்கு வேர் வளர்ச்சி மட்டுமே இருக்கும். அடுத்த மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அதிகப்படியான மேல்மட்ட வளர்ச்சியை பெறும். செம்மரத்தின் தோல் மரம் வளர்ந்த 5 வருடத்தில் முதலையின் தோல் போன்று காணப்படும். மேலும் இதன் இலைகள் வட்ட வடிவில் இருக்கும் இதை வைத்தே செம்மரத்தை எளிதாக அடையாளம் காணலாம். பயன்படாத நிலம், அதிகளவு நீர் வரத்தில்லாத நிலவுடைமையாளர்கள் தைரியமாக மர விவசாயத்திற்கு செல்லலாம்.வருங்காலத்தில் இதில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட முடியும்.

வறட்சித்தாங்கி வளரும் வேங்கை

வேங்கை மரத்தை சரியான முறையில் கவாத்து செய்தால் 20 அடிக்கு ஒரு அழகிய தூண் போல் வளரும். இது அனைத்து வகை மண்களிலும் வளரக்கூடியது. இதன் தோல் மென்மையுடதாக இருக்கும்.

முந்திரி

ஈட்டி, மகோகனி மரங்கள்

ரோஸ்வுட் எனப்படும் ஈட்டியும் நன்கு வளர்ந்து லாபம் ஈட்டித்தரும் மரம் தான். தண்ணீர் அதிகமாக தேங்கும் இடங்களில் தேக்கு மரத்தை நடவு செய்ய முடியாது. ஆனால் அதுபோன்ற இடங்களில் மகோகனி போன்று நல்ல விலைபோகும் மரங்களை நடவு செய்து லாபம் பெறலாம்.

மரம் சீக்கிரமாக வளர்ந்து அதை வெட்டி விற்க வேண்டும் என நினைக்கிறவர்கள் குமுளி தேக்கு, மலைவேம்பு போன்ற மரங்களை நடவு செய்யலாம். குமுளி தேக்கு மரம் நடவு செய்த 7 வருடத்திற்குள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். மேலும் இந்த மரத்தை ஒரு முறை வெட்டினால் அடுத்த முறை அந்த மரத்தின் தண்டிலிருந்தே மறு வளர்ச்சி பெறும்.

நீர் மருது, கரு மருது

மேலும் நீர் மருது, கரு மருது, ஆச்சா, ஆயா, சிசு மற்றும் நமது நாட்டு மரங்களான இலுப்பை, புளியமரம் போன்ற மரக்கலன்கள் செய்ய பயன்படும் மரங்களையும் வளர்த்து வருகிறோம்.

வாட்டர் ஆப்பிள்

பலன் கொடுக்கும் பழ மரங்கள்

பழ மரங்களில் மா, கொய்யா, சப்போட்டா மட்டுமே அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதை தாண்டி பல பழ மரங்களை நாங்கள் பயிர் செய்து வருகிறோம். கிட்டத்தட்ட 60 வகையான பழ மரங்கள் நடவு செய்துள்ளோம். அவற்றில் நிறைய மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களை விற்று லாபமும் பார்த்து வருகிறோம். வாட்டர் ஆப்பிள் மரத்தில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் 50 கிலோ பழங்கள் கிடைக்கின்றன.

அத்திப்பழத்தில் மூன்று வகையான அத்திகளை பயிர் செய்கிறேன். ஒன்று யானைக்காது அத்தி இதன் பழம் பெரிய அளவில் இருக்கும். இதை உலர் பழமாக பயன்படுத்தலாம். அடுத்தது நாட்டு அத்தி நன்கு பெரிதாக வளரும். இதை பொரியல் சமையலுக்கு பயன்படுத்தலாம். மூன்றாவது சற்று சிறியளவில் காணப்படும் பழச்சாறு தயார் செய்ய பயன்படும் நார்மல் அத்தி.

சீத்தாப்பழத்தில் மூன்று வகைகளை வளர்க்கிறோம். ஒன்று சாதாரணமாக பரவலாக காணப்படும் சீத்தா பழம், மற்றொன்று ராம் சீத்தா இது ரோஸ் நிறத்தில் பெரிய அளவில் வளரும். முள் சீத்தா இது மருத்துவ குணமிக்க பழமரம், ஆரம்ப கட்ட புற்றுநோய் குணப்படுத்த இது பயன்படும். இதன் இலையைக்கூட மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அரிதாக வளரக்கூடிய இம்மரத்திற்கு மருத்துவ தேவை அதிகமாக உள்ளது.

நாவல்

செர்ரி பழத்திலும் மூன்று வகையான செர்ரிகளை பயிர் செய்கிறோம். கேக் மேல் அழகுக்கு வைக்க பயன்படும் செர்ரி. இதை அப்படியே சாப்பிட முடியாது. தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து தான் சாப்பிட முடியும். இன்னொன்று தக்காளி போன்று வளரும். மற்றோன்று ஸ்டார் செர்ரி என செர்ரியில் மூன்று வகைகளை பயிர் செய்து வருகிறேன். சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை சாத்துக்குடி, போன்ற பழங்களை பயிர் செய்கிறோம். பப்ளிமாஸ் என்ற சிட்ரஸ் பழம் ஒரு பழமே 3,4 கிலோ எடைக்கு வளரும். இது அந்த அளவிற்கு சாப்பிட்ட சுவையானதாக இல்லையென்றாலும் மருத்துவ குணம் மிக்கது.

ஸ்டார் ப்ரூட் என்று சொல்லப்படும் பழ மரமும் நன்கு வளர்ந்து பலன் தருகிறது. அதேபோல் பலாமரத்திலும் மூன்று வகை மரங்களை வைத்துள்ளேன்.

முதலாவது டைனி பலா – இது சின்ன சின்னதாக வளரும். மிகவும் சுவையாகவும் இருக்கும். இரண்டாவது வெண்பலா இதுவும் நன்றாக இருக்கும். மூன்றாவது செம்பருத்தி பலா – இதன் பழத்தின் உட்புறம் முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் கரிபலா, கேரளாவில் உள்ள அயனிப் பலா வகையும் வளர்த்து வருகிறேன். பேரீச்சை பழ மரத்தையும் வளர்த்து வருகிறேன். ஒன்று ரெட் பெர்ரி -இது காயவைத்து உலர்பழமாக விற்பனை செய்யக்கூடியது. மற்றொன்று மஞ்சள்பெர்ரி இதை அப்படியே பழுப்பதற்கு முன்னே கூட சாப்பிடலாம் சுவை நன்றாக இருக்கும்.

அன்னாசிப்பழம்

நலன் காக்கும் மருத்துவ குணமிக்க செடிகள்

எங்கள் பண்ணையில் பழமரங்கள், செம்மரங்கள் மட்டுமல்லாது மருத்துவ குணமிக்க சில மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறோம். சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படும் இன்சுலின் தாவரம், எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பின் வளர்ச்சிக்கு உதவும் தவசிக்கீரை, அனைத்து பயன்பாட்டுக்கு உதவும் கறிவேப்பிலையை தோட்டம் முழுவதும் பயிர் செய்துள்ளோம். சளி, இருமலை போக்கும் ஆடாதொடா மேலும் வெண் நொச்சி, கரு நச்சி, நீர் நொச்சி என நொச்சி வகைகளையும் நட்டு பராமரித்து வருகிறோம். மர விவசாயம் மட்டுமல்லாது எங்கள் தோட்டத்தில் பல்வேற வகையான விலங்குகள், பறவை இனங்களையும் வளர்த்து வருகிறோம். 100க்கும் மேற்பட்ட புறாக்கள், செயற்கையாக குட்டை அமைத்து அதில் வாத்துகள், மீன்களையும், சிப்பிப்பாறை, டாபர்மேன் நாய்கள், வெண்பன்றிகள் போன்றவற்றையும் வளர்த்து பராமரித்து வருகிறோம்.

மரங்களை மட்டும் நட்டு வளர்க்காமல், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக மாற்றி இயற்கையோடு இயைந்த சூழலை உருவாக்கி இருக்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.