வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியிலும் மழை தீவிரமடைந்து கடந்த 3 நாள்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மஞ்சள் அலர்ட் என்றாலும் மழையின் தீவிரம் குறையவில்லை. மழை காரணமாக, நீலகிரியில் தொடர்ந்து 3-வது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அம்ரித்.
மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பொழிந்தாலும் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 200 மில்லி மீட்டர் மழையும் அப்பர்பவானியில் 140 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 1957.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.