குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இதை அடுத்து அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் ஜக்தீப் தன்கர், வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான கே.சந்திரகேசர் ராவ் அறிவித்து உள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ், இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் 16 எம்.பி.க்களும் அவருக்கு வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக, டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.