மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் ஜூலை 31-ம்தேதி தனியார் மாடலிங் நிறுவனம் சார்பில் பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், ரேம்ப் வாக் சென்றனர்.
போட்டியின் நிறைவில், அங்குபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரை ரேம்ப் வாக்செல்லுமாறு, போட்டியின் ஒருங்கிணைப்பாளர் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து, போலீஸார் ரேம்ப்வாக் சென்றனர். இந்த வீடியோ,காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்தநிலையில், ரேம்ப் வாக்சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்ட உத்தரவில், நிர்வாக வசதிக்காக 5பேரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகும், காவல் துறை தொடர்பாக நிர்வாக ரீதியான முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் நாகப்பட்டினத்திலிருந்தே வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆதரவு குரல்கள்
மனஅழுத்ததுடன் பணியாற்றும் காவலர்களுக்கு, இதுபோன்றநிகழ்வுகள் ரிலாக்ஸ் அளிக்கும்.
எனவே, ரேம்ப் வாக் சென்றதுதான் அவர்களது பணியிட மாற்றத்துக்குக் காரணம் என்றால், அதை திருப்பப் பெற வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸாருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.