டோக்கியோ: தைவானை சீனா தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார்.
ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக நான்சி பெலோசி தற்போது ஜப்பான் தலைநகர் நோக்கியோவில் இருக்கிறார். அங்கு ஜப்பானின் வெளியுறவுத் துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருடன் நான்சி ஆலோசனை நடத்தினார்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்றார். அப்போது தைவானின் கடற்பரப்புகளில் சீனா மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகள் குறித்து நேரடியாக பதிலளிக்காத அவர், “தைவானின் அதிகாரிகளை மற்ற இடங்களுக்குச் செல்வதை வேண்டுமானால் சீனா தடுக்கலாம். ஆனால், நாங்கள் அங்கு பயணிப்பதன் மூலம் தைவானை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்காது. தைவானை சீனா தனிப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது” என்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தனது ஆசிய பயணத்தின் தொடர்ச்சியாக தைவானுக்கு செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு தைவானுக்குச் சென்ற அமெரிக்க உயர் அதிகாரி என்ற பெருமையை நான்சி பெலோசி பெற்றார். நான்சியின் இப்பயணத்துக்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது என்றும் சீனா தெரிவித்தது.
நான்சியின் வருகை காரணமாக தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதையடுத்து, சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. | விரிவாக வாசிக்க > சீனா போர் தொடுத்தால் எதிர்கொள்ளத் தயார் – தைவான் ராணுவம் பகிரங்க அறிவிப்பு