புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இன்று மிகப்பெரிய அளவில் கருஞ்சட்டைப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளது. அதில் மனீஷ் திவாரி எம்.பி., “குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றோம். அப்போது விஜய் சவுக் அருகே நாங்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டோம். கிங்க்ஸ்வே முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்று பேசியிருக்கிறார்.
கருப்புச் சட்டையில் பேரணி: சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்கள் என அனைவரும் இன்று கருப்பு நிற ஆடை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர். நாட்டில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியனவற்றைக் கண்டித்து நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் காங்கிரஸார் இரு குழுக்களாகப் பிரிந்து பங்கேற்க முடிவு செய்திருந்தனர்..
காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிய பேரணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, காங்கிரஸார் போராட்டத்தினை ஊகித்து டெல்லி நிர்வாகம் நகரில் பெருந்திரளாக மக்கள் கூட தடைவிதித்தது. காங்கிரஸ் போராட்டம் நடத்தவும் அனுமதி மறுத்தது. இதனை சுட்டிக்காட்டியே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “நாடாளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களை நடுரோட்டில் வைத்து கைது செய்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஏதோ 4, 5 பேரின் நலனைக் காப்பதில் மட்டுமே அக்கறையுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு செங்கல்லாக நாங்கள் உருவாக்கி கட்டமைத்துள்ளோம். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் அத்தனையையும் சிதைத்துவிட்டார்கள். இந்த அரசாங்கத்தின் ஒரே கொள்கை மக்கள் பிரச்சினைகளை புறக்கணிக்க வேண்டும் என்பது மட்டுமே. ஜனநாயகம் மரணிப்பதை இந்தியா கண்டுகொண்டிருக்கிறது.
அரசுக்கு எதிராக யாராவது குரல் உயர்த்தினால் அவர்கள் மீது அப்பட்டமாகவே தாக்குதல் நடத்தப்படுகிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப வாய்ப்பில்லை. இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. இங்கே 4 பேர் இருந்து கொண்டு சர்வாதிகாரம் செய்கின்றனர்” என்று காட்டமாகக் கூறியிருந்தார்.