வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
மார்பகப் புற்றுநோய்
இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய். ஒவ்வோர் ஆண்டும் 87 ஆயிரம் பெண்கள் இந்த நோயால் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். பெண்களில் 28 பேரில் ஒருவருக்கு வாழ்நாளில் இந்தப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது. இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பெண்களில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனினும் 45 முதல் 64 வயதுக்குள் இருப்போருக்கு இது அதிகம் வருகிறது. ஒருவரின் குடும்பத்தில் இந்நோய் யாருக்காவது வந்திருந்தால், அவருக்கு இது வர 5 முதல் 10 சதவிகித அபாயம் உண்டு. ‘எங்கள் பரம்பரையில் யாருக்கும் இல்லை. அதனால் எனக்கு வராது’ என்று பலர் நினைப்பதுண்டு, ஆனால், பரம்பரைக் காரணம் அல்லாமலும் இது வரும்.
அறிகுறிகள் என்னென்ன?
மார்பகத்தில் வரும் கட்டி. ஆரம்ப கட்டத்தில் இதில் வலி இருக்காது. பிறகு அரிப்பு, வலி ஏற்படும். மார்பகங்களில் வீக்கம், சிவப்பாக இருத்தல், மார்பகத்தில் குழிவு, தசை தடிமனாதல், காம்பைச் சுற்றி தோல் உரிதல், காம்பில் பாலைத் தவிர பச்சை நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ நீர் வடிதல், அக்குள் பகுதியில் கட்டி ஆகியவை ஏற்படும்.
பரிசோதனைகள் என்னென்ன?
இந்தவிதமான அறிகுறிகள் ஏதாவது மார்பகத்தில் தோன்றினால், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். முதலில் மேமோகிராம் பரிசோதனை செய்வார்கள். எக்ஸ்ரே மாதிரியான ஒரு பரிசோதனை இது.எக்ஸ்கதிர்களின்றி எம்.ஆர்.ஐ மேமோகிராம் கூட செய்து கொள்ளலாம். பின்பு பயாப்சி பரிசோதனையில் உறுதி செய்வார்கள்.
-
45 வயதுக்கு மேல் உள்ளவர்களை அதிகமாக மார்பகப் புற்றுநோய் பாதிக்கிறது. அதனால் மேமோகிராம் பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது செய்து கொள்வது நல்லது. குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் வந்திருந்தால், வருடத்துக்கு ஒரு முறை மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
-
ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணப் படுத்துவது சுலபம். குணமடைந்தவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டால், அடுத்த மார்பகத்துக்கு பரவாமல் தடுக்க முடியும்; மறுபடியும் வராமல் தவிர்க்கவும் முடியும்.
-
மார்பகப் புற்றுநோயை அறிய செலவில்லாத, சுலபமான வழி, சுய பரிசோதனை. கண்ணாடி முன் நின்று மார்பகங்களை அழுத்திப் பார்த்தால், ஏதாவது வித்தியாசம் இருப்பதை உணர முடியும். சந்தேகமாக இருப்பின் மேமோகிராம் செய்து கொள்ளலாம். மாதவிலக்கான 7வது நாளுக்குப் பிறகு மாதம் ஒரு முறை இதைச் செய்ய வேண்டும். 35 வயதைத் தாண்டிய பெண்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய பயிற்சி இது.
-
எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இருப்பதில்லை. சாதாரண கட்டிகள்கூட வரலாம். அவற்றை ஃபைப்ரோ அடினோமோ (Fibroadenoma) என்பார்கள். இதை டாக்டரே உறுதி செய்ய முடியும்.
காரணங்கள் என்னென்ன?
-
மரபணு (Genes – BRCA -1 & BRCA 2) காரணமாக அம்மாவிடமிருந்து மகளுக்கு மற்றும் மகளிடமிருந்து பேத்திக்கும் வரலாம்.
-
வாழ்க்கைமுறை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம்.
-
மிக இள வயதில் பூப்பெய்துவது, மிகத் தாமதமான மெனோபாஸ் இந்த இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான பிரதான காரணங்கள்.
-
தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆகியோருக்கும் அபாயம் அதிகம்.
-
உடல் எடை கூடினால் அபாயம். அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜெனாகவே மாறும். அது ஆபத்தின் அறிகுறி.
-
மெனோபாஸுக்கு பிறகு பெண்மையைத் தக்க வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்கிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தொபியும் கூ மார்பகப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாகலாம்.
-
வைட்டமின் டி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த ஆபத்து அதிகம்.
-
உணவில் அல்லது தண்ணீரில் ராசயனம் கலந்திருப்பதும், ரசாயனங்கள் கலந்த அழகுசாதனப் பொருட்கள் உபயோகிப்பதும் காரணமாகலாம்.
-
குழந்தைக்கு ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் புகட்டுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் குறைவு.
சிகிச்சைகள் என்னென்ன?
பொதுவாக மார்பகப் புற்றுநோய்க்கு மூன்று வித சிகிச்சை முறைகள் உண்டு. கீமோதெரபியில் நரம்புகள் வழியாக மருந்துகளை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கலாம். புற்றுநோய் உள்ள மார்பகத்தில் கதிர்வீச்சு செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் கதிர் இயக்கச் சிகிச்சை தரலாம். இதுதவிர, அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் பாதித்துள்ள மார்பகத்தையும் நெறிக்கட்டிகளையும் அகற்றலாம். ஹார்மோன் மாற்று சிகிச்சை, இம்யூனோ தெரபி போன்ற சிகிச்சைகளும் உள்ளன.
புற்றுநோய் தாக்கிய செல்களின் விகிதத்தைப் பொறுத்து இந்த நோயை நான்கு நிலைகளாகப் பிரிக்கிறார்கள். ஒவ்வொரு நிலைக்கும் ஏற்றபடி சிகிச்சைகள் வேறுபடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மார்பகங்களை அகற்ற வேண்டிய தேவை இருக்காது. பூரண குணம் பெறவும் முடியும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக இருந்தபோது, பாப் ஸ்மியர் பரிசோதனையின் முக்கியத்துவத்தைச் சொல்லி விழிப்பு உணர்வு ஊட்டியதால், இப்போது அதன் தீவிரம் குறைந்துள்ளது. அதுபோல மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனையை, 45 வயதுக்கு மேலுள்ள பெண்கள் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். இதைச் செய்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நலமாக வாழலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பைபயின் கழுத்துப் பகுதிதான் கர்ப்பப்பை வாய் (Cervix) என்று அழைக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோயில் இது முதல் இடத்தை வகித்து வந்தது. இது வைரஸ் கிருமியினால் வருகிறது (HPV / Human Papilloma Virus). பிறப்பு உறுப்புகளில் தோன்றும் மரு (Genital warts), இளம் வயதில் ஆண்களுடன் தொடர்பு மற்றும் பல ஆண்களுடன் பாலியியல் தொடர்பு, பிறப்பு உறுப்புகள் சுத்தமில்லாமல் இருப்பது போன்றவைகள் முக்கிய காரணமாகும். மேலை நாடுகளில் பாப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை மூலம் இப்புற்றுநோய் குறைந்து காணப்படுகிறது.
இதை ஆரம்பநிலையில் கண்டறிய பாப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. 30 வயதைத் தாண்டிய பெண்கள் அனைவரும் இப்பரிசோதனையை மூன்று ஆண்டிற்கு ஒரு முறை செய்வது அவசியம். கர்ப்பப்பை வாயிலிருந்து எடுக்கப்படும் செல்கள் பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் கர்ப்பப்பை வாயில் கிருமித் தொற்று, புற்றுநோய் அல்லது புற்றுநோயாக மாறக் கூடிய நோய்கள் போன்றவற்றைக் கண்டறிய முடியும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இது மிகவும் எளிதான வலியற்ற பரிசோதனை. நோயாளிகள் பயம் அடையத் தேவையில்லை.
ஒரு சிலருக்கு மட்டுமே அசௌகரியம் ஏற்படக்கூடும். இதை வெளி நோயாளிகள் பிரிவிலேயே செய்து கொள்ளலாம். இப்பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. பேப் ஸ்மையர் பரிசோதனையில் சந்தேகத்திற்குரிய விதத்தில் பரிசோதனை முடிவுகள் இருப்பின் கொல்போஸ்கோபி (Colposcopy) மற்றும் பயாப்சி (Biopsy) போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.
கடந்த 20 ஆண்டுகளில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் மிகவும் குறைந்துள்ளதற்கு முக்கிய காரணமே பேப் ஸ்மியர் எனப்படும் ஸ்கிரீனிங் பரிசோதனை தான். இதனால் நோயின் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இப்புற்று நோயின் எந்த அறிகுறியும் இல்லாத பெண்களுக்கு இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பாப் ஸ்மியர் பரிசோதனை செய்யப்படுகிறது. ஸ்கிரீனிங் சோதனையில் நேர்மறையானதாக இருந்தால், நோயை கண்டறிய சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்.
இப்பரிசோதனை மூலம் கர்ப்பப்பை வாயின் திசுக்களில் ஆரம்ப நிலையில் ஏற்படும் புற்று நோயின் மாற்றங்களை எளிதில் கண்டு கொள்ள முடியும். இந்த மாற்றங்கள் ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து பின்னர் தான் புற்று நோயின் தீவிர தன்மை வெளிப்படும். ஆகையால் பாப் ஸ்மியர் ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் பற்று நோய் வருவதை ஆரம்ப நிலையிலேயே கண்டு தக்க சிகிச்சை எடுத்து கொள்ள முடியும்.
சிகிச்சை முறைகள் : ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் அதில் சுற்றியுள்ள பாகங்களை முழுமையாக அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டும். சற்று காலம் தாழ்த்திய புற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரங்கள் பல நடந்துள்ளன போதிலும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏற்படும் இறப்புகள் வெகுவாக குறையவில்லை என்பது தான் சற்று வேதனைக்கு தரும் செய்தியாகும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டதில், சுமார் 70 சதவீதம பேர் சற்று முற்றிய நிலையிலேயே இருந்துள்ளார்கள். இவர்களுக்கு சிகிச்சைக்கு ஆகும் செலவு ஆரம்பகட்ட புற்று நோய்க்குண்டான செலவைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
நோய் தடுப்பு முறை
-
21- 65 வயதுடைய பெண்கள் ஒவ்வொறு 3 வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை பேப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் எச்.பி.வி. பரிசோதனையையும் செய்துக் கொள்ள வேண்டும். •
-
65 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முன்னரே பேப் ஸ்மியர் பரிசோதனை செய்ததில் சரியாக இருந்தால் மறுபடியும் பேப் ஸ்மியர் பரிசோதனை செய்ய தேவையில்லை.
-
9 – 26 வயது பெண்கள் எச்.பி.வி. தொற்று நோய் தடுப்பூசி கட்டாயமாக போட வேண்டும். இந்த தடுப்பூசியை 45 வயது வரை போடலாம்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புண்களை முன்கூட்டிய பாப் ஸ்மியர் ஸ்கிரீனிங் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கலாம்.
பெண்கள் தொடர்பான புற்றநோய்களின் விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக இருப்பது ஆபத்தானது. எனவே மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து ஆரம்பநிலையிலேயே நோயைக் கண்டறிந்து அதை வருமுன் தவிர்ப்போம்.
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு அடுத்ததாக மார்பக புற்று நோய் வர வாய்ப்பு அதிகம். ஐம்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பு புற்று நோய் வர வாய்ப்பு அதிகமாகும். ஆண்களுக்கும் கூட மார்பக புற்று நோய் வரக்கூடும். ஆனால் இது சற்று அரிது. ஒரு மார்பகத்தில் புற்று நோய் ஏற்பட்டிருந்தால், அடுத்த மார்பகத்திலும் புற்ற நோய் வர வாய்ப்புண்டு. இரத்த சார்ந்த உறவினர்களுக்கு இப்புற்று நோய் இருப்பின், அக்குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் வர 2 3 மடங்கு வாய்ப்பு அதிகமாகும்.
மார்பக புற்று நோய் வர வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள்:
-
நெருங்கிய உறவினர்களுக்கு மார்பக புற்று நோய் இருப்பது
-
இளம் வயதிலேயே பூப்பு அடைந்தவர்கள்
-
காலம் தாழ்த்தி இறுதி மாதவிடாய் அடைந்தவர்கள் .
-
குழந்தை பேறு இல்லாதவர்கள்
-
முதற் குழந்தை 40 வயதிற்கு மேல் பெற்றவர்கள் .
-
இறுதி மாதவிடாய் அடைந்த பின்பு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் எடுத்துக் கொள்பவர்கள்
-
அதிக எடை உள்ளவர்களுக்கும் மற்றும் மது அதிகம் அருந்துபவர்களுக்கும் மார்பக புற்று நோய் வருவதற்கு ஓரளவிற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. .
இதன் முக்கிய அறிகுறியே மார்பகத்தில் தோன்றும் கட்டி, கட்டியை தவிர மார்பகத்தின் அளவு மற்றும் உருவத்தில் மாறுபாடு ஏற்படும். பொதுவாக இக்கட்டியினால் வலி தும் இருக்காது. மார்பகத்திலிருந்து இரத்தம் மற்றும் நீர் கசிவது, அக்குளில் கட்டி தோன்றுதல் இதன் பிற அறிகுறிகளாகும்.
சுய மார்பு பரிசோதனை செய்து கொள்வது (முக்கியமாக குடும்பத்தில் யாருக்காவது மார்பு புற்று நோய் இருப்பின்), மெமோகிராம், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், திசுக்களை எடுத்து பரிசோதனை செய்வதின் மூலம் இந்நோயை அறியலாம். மெமோகிராம் செய்வதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை.
இந்நோய்க்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விருப்பமே முதல் இடம் வகிக்கிறது. சிகிச்சை முறை, புற்று நோயின் தன்மை மற்றும் மொத்தமாக உடல்நிலையை பொறுத்ததே ஆகும். அறுவை சிகிச்சை தான் சிறந்த சிகிச்சை முறையாகும். அறுவை சிகிச்சைக்கு பின்பு கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும். புற்று நோய் மார்பகத்தை தாண்டி உடலில் மற்ற பாகங்களுக்கு பரவியிருந்தால் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இச்சிகிச்சையில் சில பக்கவிளைவுகளும் உண்டு. வாந்தி, பசி குறைவு, உடல் களைப்பு, முடி கொட்டுதல் போன்றவை. மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். ஏனெனில் சிலருக்கு சிகிச்சை முழுவதும் பெற்று இருந்தால் கூட மீண்டும் வர வாய்ப்புண்டு. தற்பொழுது உள்ள நவீன சிகிச்சை முறையினால் பலருக்கு புற்று நோயின் தொல்லையிலிருந்து மீண்டு நலமுடன் வாழலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.