நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தன. அப்போது பூஜ்ய நேரத்தின்போது இது குறித்து விவாதிக்கப்படும் என சபாநாயகர் பதிலளித்தார். சபாநாயகரின் இந்தப் பதிலை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
உடனடியாக விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர், இங்கு நடப்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் கண்ணியம் காக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் திமுக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வை கண்டித்து மக்களவையில் இருந்து வெளியேறி, குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயற்சித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“