2ஜி மேல்முறையீட்டு வழக்கில் தினமும் விசாரணை: சி.பி.ஐ., மனு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தினமும் விசாரணை நடத்த வேண்டும் என டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., மனு தாக்கல் செய்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தரப்பில், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட, முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான ராஜா, அந்த கட்சி எம்.பி., கனிமொழி உள்ளிட்ட, 14 பேரையும், 2017 டிசம்பரில், சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. ‘குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க, சி.பி.ஐ., தவறி விட்டது’ என, அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில், 2018 மார்ச்சில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் கடந்த 2 ம் தேதி விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ., மேல்முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ., தரப்பு வாதங்களை அடுத்த மாதம் செப்., 22, 23 தேதிகளில் முன் வைக்க அனுமதி அளித்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா உத்தரவிட்டார்.

latest tamil news

இந்நிலையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்கல் செய்த மனு: 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தினமும் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு , முக்கியத்துவம் வாய்ந்தது. பொது வாழ்வில் நன்னடத்தை, அதிகாரிகளின் நேர்மை தொடர்பான பிரச்னைகள் சம்பந்தப்பட்டது. தேசியளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வழக்கு என்பதால் விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இந்த வழக்கு பொது மக்களின் நலன்களை உள்ளடக்கியது என்பதால், வழக்கு மற்றும் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, நீதித்துறையின் நலனுக்காக மேல்முறையீட்டு மனுவை தினமும் விசாரிக்க வேண்டும். வாதங்களை துவக்குவதற்கான நாளை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.