மும்பை: நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ரன்வீர் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் பத்திரிகை ஒன்றின் முன்பக்க அட்டையில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டவுடன் பெரும் கண்டனங்கள் எழுந்தன. சிலர் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு கருத்துகளும் தெரிவித்தனர். ரன்வீர் சிங்கிற்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் வழக்கும் பதிய செய்யப்பட்டது. இந்த நிலையில் ரன்வீர் சிங்கிற்கு மற்றொரு வேலை கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீப்பிள் ஃபார் தி எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) – இந்தியா தரப்பில் ரன்வீர் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், ‘பீட்டா அமைப்பின் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. சைவ உணவுகளை ஊக்குவிக்கும் வகையில், போட்டோ ஷூட் எடுக்க உள்ளோம். அதற்காக நிர்வாண படங்கள் தேவைப்படுகின்றன. தாங்கள் எங்களுக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறோம். இந்த கடிதத்துடன் நடிகை பமீலா ஆண்டர்சனின் புகைப்படத்தையும் உங்களது பார்வைக்காக இணைத்துள்ளோம்’ என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.