இந்தியாவின் பல மாநில மக்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்துகூட சுற்றுலாவுக்காகப் பலரும் படையெடுத்து வரும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஒரு ஊர், முதன்முறையாக சாலை இணைப்பை பெறுகிறது. ஆம்!அதுவும் இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு… கிட்டத்தட்ட 95 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மாவட்டமான ரஜோரியில், மத்திய அரசின் சாலை இணைப்பு திட்டமான பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனாவின் கீழ் புத்தல் கிராமம் முதல் சாலை இணைப்பைப் பெறுகிறது.
இதற்கு முன்னதாக அந்த கிராம மக்கள் சந்தைக்கோ அல்லது மருத்துவமனைக்கோ செல்வதாக இருந்தால் கிட்டத்தட்ட 12 முதல் 14 கிலோமீட்டர் நடக்கவேண்டியிருந்தது. ஆனால் இந்த புதிய சாலை இணைப்பின் மூலம், தங்கள் வீட்டு வாசலிலேயே பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை சேவைகளைப் பெறவிருக்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கிராம மக்கள், “பின்தங்கிய பகுதிக்கு முன்னுரிமை அளித்த பிரதமருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவசர காலங்களில், முக்கிய நகருக்குச் செல்ல 3 முதல் 4 மணி நேரம் ஆகும். ஆனால் இந்த சாலை மூலம் இப்போது எங்களின் பயண நேரம் குறையும்” என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பள்ளி மாணவன் ஒருவன், “இப்போது எங்களுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்திருக்கிறது. முன்பெல்லாம் 12 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு வெறுங்காலுடனே சென்றோம், ஆனால் இப்போது நாங்கள் பேருந்தில் செல்லப்போகிறோம். சாலை வசதி கிடைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினான்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஏப்ரலில், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சாலை இணைப்பை மேம்படுத்துவதில் ஜம்மு-காஷ்மீர் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடக்கத்து. முதல் இரண்டு இடங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.