புதுடெல்லி: கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகள் என்ன என்பது பற்றி மக்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இதுகுறித்து விழுப்புரம் தொகுதியின் திமுக எம்பியான டி.ரவிக்குமார், “கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறதா.. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஆஷா பணியாளர்களும் ஈடுபட்டுள்ளார்களா? விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அவர்களால் மேற்கொள்ளப்படும் உத்திகள் என்ன? திட்டத்தின் நோக்கங்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏதேனும் சவால்களை எதிர்கொள்கின்றனவா?’ எனக் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பாரதி ப்ரவீன் பவார் , “10-19 வயதுக்குட்பட்ட பருவத்திலுள்ள பெண்களுக்காக மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பருவப் பெண்களிடையே அதிகரிக்கப்படுவதும் மற்றும் பருவப் பெண்களுக்கு உயர்தர சானிட்டரி நாப்கின்கள் எளிதாகக் கிடைக்கச் செய்வது ஆகும்.
சானிட்டரி நாப்கின்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்வது என மாநிலங்களில் இருந்து பெறப்படும் முன்மொழிவுகளின் அடிப்படையில், மாநிலத் திட்ட அமலாக்கத் திட்டத்துறை (பிஐபி) வழியே தேசிய சுகாதார இயக்கத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் அங்கீகாரம் பெற்ற ஆஷா எனும் சமூக நல ஆர்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கும், திட்டத்தை தடையின்றி செயல்படுத்துவதற்கும் ஆஷா ஊழியர்கள் மூலம் கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது. மாதவிடாய் சுகாதாரம் குறித்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்காக ஆஷா ஊழியர்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பருவ வயதுப் பெண்களுடன் மாதாந்திர சந்திப்புகளை நடத்துகின்றனர். மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாத பெண்களிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தவும் எதிர்கால கூட்டங்களுக்கு வருகை தருவதை ஊக்குவிக்கவும் வீடுகளுக்கே சென்று உரையாடுகின்றனர்” என்று விளக்கமாக பேசினார்.
பின்னர் இது குறித்து எம்பி ரவிகுமார் கருத்து கூறுகையில், ‘‘ஆஷா திட்டத்தில் 10 லட்சம் பேர் பணிபுரிவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் ஆஷா திட்டம் இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் மாநில அரசே இலவச நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 6 பேக்குகள் கொண்டதாக பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதை ஆசிரியைகள் மேற்பார்வையில், அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக செயல்படுத்துகிறார்கள். இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை’’ எனத் தெரிவித்தார்.