உதகை: நீலகிரி மாவட்டத்தில் மழையுடன், பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அவலாஞ்சியில் 200 மி.மீ., மழை பதிவானது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மஞ்சள் அலர்ட் என்றாலும் மழையின் தீவிரம் குறையவில்லை. மழை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பொழிந்தாலும் நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர்பவானி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 200 மில்லி மீட்டர் மழையும் அப்பர்பவானியில் 140 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
சூறாவளி காற்றால் மரங்கள் சாய்ந்தன: குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான வண்டிச்சோலை, அருவங்காடு, வண்ணாரபேட்டை பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனால் சாலையோரத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர் மழைக்கு கோடநாடு செல்லும் சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று விழுந்தது. இதனால் அங்கு 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால் புன்னம்புழா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முதுமலை-தெப்பக்காடு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
கூடலூர் அருகே உள்ள இருவயல், மொலப்பள்ளி பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள ஒடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்பை முழுவதுமாக சூழ்ந்தது. இதனால் அங்கிருந்து 72 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு: கூடலூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரத், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின: மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், காட்டேரி பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் காட்சி முனைகள், நேரு பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடியது. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கினர்.
மழையளவு: தேவாலாவில் 181, நடுவட்டத்தில் 152, பந்தலூரில் 110, கூடலூரில் 75, உதகையில் 74.5, ஓவேலியில் 73, கிளன்மார்கனில் 71, எமரால்ட்டில் 60, கோத்தகிரியில் 56, கேத்தியில் 54, மசினகுடியில் 49, கோடநாட்டில் 45, குந்தாவில் 40, கிண்ணக்கொரையில் 37, கெத்தையில் 33, குன்னூரில் 28 மி.மீ., மழை பதிவானது.