9 டன் ரேஷன் அரிசி கடத்தலில் அரசு பதவியில் இருப்போர் பின்னணி: சிபிஐக்கு புதுச்சேரி அதிமுக கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 டன் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் அரசு பதவியில் இருப்போர் பின்னணியில் இருப்பதாக சிபிஐ இணை இயக்குநருக்கு ஆளும் கட்சியின் கூட்டணியிலுள்ள அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சிபிஐ இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரோனா காலத்தில் வேலையின்றி ஏழை மக்கள் உணவுக்காக தவித்தனர். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இலவசமாக ஏழைகளுக்கு அரிசியை வழங்கியது. புதுவை மாநிலம் முத்தியால்பேட்டை சோலை நகரில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட இலவச அரிசியை அரசியல் பலம் கொண்ட சமூக விரோதிகள் கொள்ளையடித்துள்ளனர்.

இங்கிருந்து கடத்தப்பட்ட சுமார் 9 டன் ரேஷன் அரிசியை சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யாமல் வாகனத்தை ஓட்டி வந்த 4 பேரை மட்டும் போலீஸார் கைது செய்தனர். அரசு பதவியில் உள்ளவர்கள் அரிசி கடத்தலின் பின்னணியில் உள்ளதாக தெரிகிறது.

இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் புதுச்சேரி அரசும், காவல் துறையும் எடுக்க முன்வரவில்லை. அரிசி கடத்தலை மறைக்கும் வகையில், இந்திய உணவுக்கழக குடோவுனில் இருந்து வீணான அரிசியை வாங்கியதாக போலியான ஆவணங்கள் தயாரித்து பெரும் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. பிடிபட்ட 9 டன் அரிசியையும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விடுவித்துள்ளனர்.

முத்தியால்பேட்டை சோலைநகர் உட்பட பல பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி லாரியில் ஏற்றும் வீடியோவும் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. எனவே புதுவை அரசும், காவல்துறையும் இவ்விஷயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், ஏழை மக்களின் வரிப்பணத்தில் வழங்கும் இலவச அரிசியை கொள்ளையடித்து சுரண்டும் கும்பலை வெளி உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டும்.

எனவே இவ்விவகாரத்தில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்தி, இலவச அரிசியை கடத்திய கும்பலை கண்டறிய வேண்டும் என புதுவை மாநில அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.