அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் ஆம்ஆத்மி, இப்போதே தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதாவின் 27ஆண்டு கால ஆட்சியில் குஜராத் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்ய வில்லை என்று அக்கட்சிக்கு திமிர் பிடித்து ஆணவதுடன் செயல்படுகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு தேர்தல் களம் இப்போதே அனல்பறக்கத் தொடங்கி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பாஜகவுக்கு எதிராக முதன்முறையாக ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. மேலும் அசாதுதீன் ஓவைசியின் கட்சியும் களமிறங்குகிறது. அத்துடன் காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ள ஆம்ஆத்மி குஜராத் மாநிலத்திலும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் களப்பணியாற்றி வருகிறது. ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவில் குஜராத் மாநிலத்துக்கு சென்று தேர்தல் பிரசாரம், பல்வேறு சலுகைகள் அறிவிப்பு என ஒருபுறம் மக்களை கவரும் நிலையில், மற்றொருபுறம் பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஏற்கனவே கடந்த ஜூலை 21ந்தேதி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கெஜ்ரிவால் சூரத் நகரில் மக்களிடையே கூட்டத்தில் பேசும்போது, அனைத்து உள்ளூர் நுகர்வோர்களுக்கும் நாங்கள் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவோம் என அறிவித்து, பாஜகவுக்கு அதிர்சிசையும், மக்களுக்கு மகிழ்ச்சியும் கொடுத்தார். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான நிலுவையிலுள்ள அனைத்து மின் கட்டண பில்களையும் தள்ளுபடி செய்வோம் என கூறி ஆச்சரியம் ஏற்படுத்தினார்.
2வதாக, அனைத்து வேலையில்லா நபர்களுக்கும் வேலை அல்லது மாதம் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து மக்களிடையே மேலும் வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து தற்போது குஜராத்தில் 2 பயணமாக முகாமிட்டுள்ள கெஜ்ரிவால், அங்கு விஷ சாராயத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசியதுடன், அவர்களுக்கு உதவி செய்தார். அப்போது மாநில பாஜக முதல்வர் உள்பட யாரும் பலியானவர்களையோ, அவர்களின் குடும்பத்தினரையோ கண்டுகொள்ளவில்லை. ஆனால், நான் டெல்லி முதல்-மந்திரியாக இருந்தும் கூட குஜராத்தில் விஷ சாராயத்தில் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்தேன் என்றவர், கடந்த 27 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக, குஜராத் மக்களுக்காக ஒன்னுமே செய்யவில்லை, அக்கட்சிக்கு திமிர்பிடித்து விட்டது, ஆணவத்துடன் செயல்படுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
ஆம்ஆத்மியின் அதிரடி மக்கள் நல அறிவிப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ஆளும் பாஜகவினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.