சென்னை: பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய சென்னையில் பிங்க் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் விரைவில் பிங்க் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து கொள்ளலாம். இதன்படி மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளுக்கு பிங்க் வண்ணம் தீட்டப்பட்ட 50 பிங்க் பேருந்துகளை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
மகளிர் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் தெரிந்துகொள்ள ஏதுவாக பேருந்து முன்பும், பின்பும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மற்ற மாவட்டங்களில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளுக்கும் பிங்க் வண்ணம் தீட்டப்பட்டு இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் விமர்சனம்: சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிங்க் பேருந்துகளில் முழுமையாக அல்லாமல் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மட்டும் வண்ணம் தீட்டப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அவசரகோலத்தில் இப்படி அரைகுறையாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளின் புகைப்படங்களை வைத்து மீம்ஸ் உருவாக்கபட்டு கலாய்ப்புப் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன.