ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் பகுதியில் உள்ள ராஜ்புரா கிராமத்தில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் பல துறவிகள் தங்கி தியானம் செய்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 60 வயதான ரவிநாத் என்ற துறவியின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆசிரமத்திற்குப் பின்புறம் உள்ள நிலத்தின் உரிமையாளராக பா.ஜ.க எம்.எல்.ஏ பூரா ராம் சவுத்ரி என்பவர் இருக்கிறார். தனது நிலத்துக்காக ஆசிரமத்திற்குச் சொந்தமான இடத்தில் பாதை அமைக்கத் திட்டமிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ, ஆசிரம வளாகத்தில் உள்ள நிலத்தை அளக்க மூன்று நாள்களுக்கு முன், சில அதிகாரிகளை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இதனால், ஆசிரமத்துக்கும் பா.ஜ.க பிரமுகருக்கும் நடந்த பிரச்னையில், துறவி தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், துறவி எழுதியதாகக் கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், எம்.எல்.ஏ உடனான நிலத் தகராறு குறித்தும், தனது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆசிரமத் துறவிகள், “இறந்தவருக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம். துறவி ரவிநாத் தற்கொலைக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ தான் காரணம். ஆனாலும், தற்கொலை செய்துகொண்டவர் எழுதிய கடிதத்தை காவல்துறை மறைத்துவிட்டது” எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பா.ஜ.க எம்.எல்.ஏ பூரா ராம் சவுத்ரி, “30 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரமத்தின் பின்னால் வாங்கிய எனது வணிக நிலம் இருக்கிறது. அதில் ரிசார்ட் கட்ட திட்டமிட்டிருந்தேன். வியாழக்கிழமை, தாசில்தாரிடம் அனுமதி பெற்று, அரசு அதிகாரி மூலம் நிலம் அளக்கப்பட்டது. அதே போல, சில நாள்களுக்கு முன்வரை, அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எங்களுக்குள் எந்த தகராறும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.