தாய் தனது குழந்தையை 4ஆவது மாடியில் இருந்து வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சம்பங்கிராம் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிரண் – சுஷ்மா தம்பதிக்கு 4 வயதில் துருதி என்ற பெண் குழந்தை இருந்தார். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சரியாக பேச்சும் வராது.
குழந்தையை சுஷ்மா தனி ஆளாக கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல் கிரண் பணிக்கு சென்றுள்ளார். அப்போது சுஷ்மா, குழந்தையை 4ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார்.
பின்னர் அவரும் அதே மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். குடியிருப்பு வாசிகள் சுஷ்மாவை மீட்டனர். இதனிடையே கீழே விழுந்த குழந்தை இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை கொலை செய்ததற்தாக சுஷ்மாவை கைது செய்து விசாரித்தனர்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தையை தன்னால் சரிவர கவனித்து கொள்ள முடியவில்லை என்று சுஷ்மா கதறி அழுதுகொண்டே கூறியுள்ளார். அதோடு, தனது குழந்தையை ஏற்கனவே ஒரு முறை ரயில் நிலையத்தில் வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்ததாகவும், இதையறிந்த தனது கணவர் தன்னை அடித்து விட்டு குழந்தையை தேடி மீட்டதாகவும் தெரிவித்தார்.
newstm.in