ஜெருசலேம்,
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
இந்நிலையில், காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி, காசாவின் மையப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அவரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தைசிர் அல் – ஜபரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்.
இதில் அலா குதும் என்ற 5 வயது சிறுமியும், அவளது தந்தையும் அருகில் கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தார் கூறுகையில், “சிறுமியின் தாய் மிகுந்த துயரத்தில் இருக்கிறார். ஒரே நேரத்தில் குழந்தையையும் கணவரையும் அவர் இழந்திருக்கிறார். நாங்கள் அதிர்ச்சியில் இருக்கிறோம். 5 வயதாகும் அந்த அப்பாவிச் சிறுமி இப்படி கொல்லப்பட என்ன செய்தார்?” என்று கேள்வி எழுப்பினர்.
தாக்குதலைக் கண்ட ஒருவர் கூறும்போது, “மதிய உணவு சப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தோம். குழந்தைகள் சாலைகளில் விளையாடி கொண்டிருந்தன. தாக்குதல் சத்தம் கேட்டு நாங்கள் பயந்து போனோம். அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என்றார்.