தன்பாத்: ஜார்கண்ட் மாவட்ட நீதிபதியை ஆட்டோ ஏற்றி கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகியோருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தன்பாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி காலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், திட்டமிட்டு நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று நீதிபதியின் குடும்பத்தார் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், போலீஸார் கொலை வழக்காக மாற்றுவதற்கு தாமதம் செய்தனர். இதையடுத்து, ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவி ரஞ்சன் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன்பின், விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி தன்பாத் போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். மேலும் அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தன்பாத் மாவட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் லக்கன் வர்மா மற்றும் அவரது கூட்டாளி ராகுல் வர்மா ஆகிய இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.