மொத்த மதிப்பு ரூ.229 கோடி… – சினிமா ஃபைனான்சியர்,  தயாரிப்பாளர்களிடம் வருமான வரி சோதனையில் சிக்கியவை

சென்னை: தமிழகத்தில் சினிமா ஃபைனான்சியர், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ.200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். சினிமா பைனான்சியர், திரைப்படத் தயாரிப்பாளரான இவர் மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓட்டல், திரையரங்கம், நிதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் மீது வருமான வரி ஏய்ப்பு செய்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து வருமான வரித் துறையினர் இவருக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் ஆக.2-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தத் தொடங்கினர்.

மதுரை காமராசர் சாலை, கீரைத்துறை ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், செல்லூரில் உள்ள கோபுரம் சினிமாஸ் திரையரங்கம், தெற்குமாசி வீதியில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் 3-ம் நாளாக ஆக.4-ம் தேதி வரை வருமான வரி துறையினர் சோதனை செய்தனர்.

அன்புச்செழியனைத் தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா ஆகியோருக்கு சொந்தமாக சென்னையில் உள்ள அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், வேலூரில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “வருமான வரித்துறையினர் 02.08.2022 அன்று திரைப்படத் துறையுடன் தொடர்புடைய சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களின் இருப்பிடங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

சோதனை நடவடிக்கைகளின் போது, கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த தேடுதலின் போது ரகசிய இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பைனான்சியர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் வரி ஏய்ப்புச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. ஏனெனில் வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம். அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத பணம் வசூலிக்கப்பட்டதைகாட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு மறைத்துவிடுவதால் உண்மையான வருமானம் மறைக்ககப்பட்டுள்ளது.இதுவரை, தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ.200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.