மும்பை: மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் போதைப்பொருள் பதுக்கிய விவகாரம் தொடர்பாக ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் காட்கோபர்-மன்குர்த் இணைப்புச் சாலையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெண் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டார். மேற்கண்ட 4 பேரிடம் விசாரணை நடத்தியதில் ஐந்தாவது குற்றவாளி தான் போதை பொருள் தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவன்தான் போதைப் பொருளின் மூலப் பொருட்களை சப்ளை செய்துள்ளான். அவன் வேதியியல் பட்டதாரி என்பதால் போதைப் பொருளான மெபெட்ரோன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவன். அதையடுத்து அந்த ஐந்தாவது குற்றவாளியை கைது செய்தோம். அவன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவன் என்பதால், தனது வேதியியல் அறிவைப் பயன்படுத்தி மெபெட்ரோனை உருவாக்க ரசாயனங்களை பயன்படுத்தி வந்தான். தனது அடையாளத்தை மறைக்க, சமூக ஊடக தளங்களில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை உருவாக்கி உள்ளான். நல்லசோபரா என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 709 கிலோ மெபெட்ரோனைக் கைப்பற்றினோம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.1,403 கோடியாகும்’ என்றார்.