EXCLUSIVE: BSNL-ஐ மத்திய அரசு இருட்டடிப்பு செய்வது இப்படி தான்!

தொலைதொடர்பு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடந்தது. ரூ 5 லட்சம் கோடி வரை இந்த ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு வருமானம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்தது.

பாஜக அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு சதி செய்து வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதா என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இது ஒருபுறமிருக்க ஏன் இந்த ஏலத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கலந்து கொள்ளவில்லை? நாடே 5ஜியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் ம்ட்டும் ஏன் இன்னும் 3ஜி சேவையிலேயே தொடர்கிறது என பல கேள்விகள் எழுகின்றன.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் – தொலைத்தொடர்பு ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மதிவாணனை சமயம் தமிழ் சார்பாக சந்தித்து பேசினோம். அவர் கூறிய கருத்துகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சிகரமானவை.

ஓபிஎஸ் – சசிகலா கூட்டணி? எடப்பாடியை எதிர்க்க இதுதான் வழி!

“காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொலை தொடர்பில் மிகுந்த அனுபவமிக்க நிறுவனம் பிஎஸ்என்எல். அரசு நிறுவனமாக இருந்த இதை கார்ப்பரேட் நிறுவனமாக உருமாறவைத்தது அப்போதைய வாஜ்பாய் அரசு. அரசுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் பிஎஸ்என்எல் தொலைபேசி சேவையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டிருந்த போதும் மொபைல் சேவைக்கு அனுமதிக்கப்படவில்லை. தனியாருடன் போட்டியிட முடியாது என்று கூறிக்கொண்டு திட்டமிட்டே பிஎஸ்என்எல்லை மத்திய அரசு புறக்கணித்து வந்தது.

90களின் இறுதியில் மொபைல் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து தனியார் மட்டுமே அதில் கோலோச்சிக் கொண்டிருந்தன. கிட்டதட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட போராட்டத்துக்கு பின்னரே 2002வாக்கில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையில் அடியெடுத்து வைக்க முடிந்தது.

ஆனால் மொபைல் சேவையில் இறங்கிய குறுகிய காலத்திலேயே பத்து பதினைந்து நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு பிஎஸ்என்எல் முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம் பிஎஸ்என்எல் வசம் இருந்த அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தான். மேலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குக்கிராமம், மலை முடுக்குகளிலெல்லாம் பிஎஸ்என்எல் டவர்கள் நிறுவப்பட்டன.

குறுகிய காலத்தில் பிஎஸ்என்எல்லின் வளர்ச்சி தனியார் நிறுவனங்களின் கண்ணை உறுத்த தொடங்கின. மத்திய அரசுகளும் அவர்களோடு இணைந்து அவர்களுக்கு சாதகமாக நடந்துகொண்டன.

3ஜி ஏலம் 2010ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் ஏலத்துக்கு முன்பாகவே அப்போதைய காங்கிரஸ் அரசு பிஎஸ்என்எல்லுக்கு 3ஜி அலைக்கற்றை வழங்கியது. ஆனால் அதன்பின்னர் தனியாருக்கு ஏலம் விட்டு ஏலத்தில் எந்த நிறுவனம் அதிக விலை கொடுதததோ அந்த தொகையை கணக்கு செய்து பிஎஸ்என்எல்லிடமிருந்து அரசு பெற்றுக் கொண்டது. பிஎஸ்என்எல்லின் வீழ்ச்சி அங்கிருந்து தொடங்குவதாக நான் கருதுகிறேன்.

2010இல் ஏலம் விட்டு ஏர்டெல் நிறுவனம் 4 ஜி சேவையை 2012ஆம் ஆண்டு தொடங்கியது. 2022ஆம் ஆண்டு 5ஜி ஏலம் விடப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாகியும் இன்னும் 4ஜி பிஎஸ்என்எல்லுக்கு கிடைக்கவில்லை. தொலைத்தொடர்பு துறை அமைச்சர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி வழங்கப்படும் என்கிறார். அப்போது 5ஜி பரவலாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும்.

தனியார் நிறுவனங்களின் சேவை நன்றாக இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு பிஎஸ்என்எல் டவரில் தான் அந்த தனியார் நிறுவனங்களுக்கான சிக்னல் கிடைக்கிறது என்பது தெரியாது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் டவர்களை தான் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன.

எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பிஎஸ்என்எல்லை இப்படித்தான் நடத்தியுள்ளனர். பாஜக அதில் மிக மோசம்” என்று மதிவாணன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.