ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் யுவான் வாங் 5 கண்காணிப்புக் கப்பலின்
பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதற்கு முன்னர்
சீனத் தூதரகம் பீய்ஜிங்குடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சீன தூதுவர் நேற்று(06) இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இதனைத்
தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் இந்த உளவு கப்பல் அதன் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற
அடிப்படையில் இந்தியா கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் கப்பல்
விடயம், இலங்கை அரசாங்கத்திற்கு புவிசார் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.
சீன கப்பல்
ஜனாதிபதி விக்கிரமசிங்க பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்னர் கப்பலை
நங்கூரமிடுவதற்கான அனுமதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பாதுகாப்பு அமைச்சு
மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றால் வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை 12ஆம் திகதியன்று இந்த அனுமதி இலங்கை அரசாங்கத்தினால்
வழங்கப்பட்டுள்ளது.
எனினும் கொழும்பிடம் இருந்து விளக்கம் கேட்கும் வரை புதுடெல்லிக்கு இந்த விடயம்
அறிவிக்கப்படவில்லை என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.
ஹம்பாந்தோட்டை துரைமுகம்
கப்பல் இப்போது இந்தோனேசியாவிற்கு அருகே நடுக்கடலில் நேரடியாக ஹம்பாந்தோட்டை
நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் ஆகஸ்ட் 11 முதல் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்
நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அதிருப்திக்கு மத்தியில் இலங்கையின்
வெளியுறவு அமைச்சு, சீனத் தூதரகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
ஜனாதிபதி ரணிலுடன் அவசரச் சந்திப்பு
அதில், யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் திகதியை மேலும்
ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்வரை ஒத்திவைக்க வேண்டும் என்று ராஜதந்திர
விடயங்களுக்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் ஆள் குறிப்பு( Third Person Note)
மூலம் கோரப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கை கிடைத்தவுடன், ஜனாதிபதி ரணிலுடன் அவசரச் சந்திப்பு
ஒன்றை சீனாவின் தூதுவர் கேட்டிருந்தார்.
இதன்போதே அவர் சீனாவின் அரசாங்கத்துடன் இது தொடர்பில் ஆலோசனை நடத்தி பதில் கூறுவதாக ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சீனாவின் யுவான் வாங் 5 கப்பல், செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம்
விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது மற்றும் பெரிய
பரவளைய கண்காணிப்பு எண்டெனா மற்றும் பல்வேறு அதிநவீனக்கருவிகள் அதில்
பொருத்தப்பட்டுள்ளன.
ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் மேற்கொள்ளப்படும் இந்தியாவின் ஏவுகணை
சோதனைகளை கண்காணிக்க முடியும் என இந்திய ஊடகங்கள் அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.