‘மதுரை, சென்னையில் அவள் வாசகிகள் பங்கேற்ற ஜாலி டே நிகழ்ச்சியை எங்கள் ஊரில் எப்போது நடத்துவீர்கள்?’ என பல்வேறு நகரங்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் கேட்டு வரும் நிலையில், நெல்லையில் உள்ள வாசகிகளுக்கு ஜாக்பாட் அடித்தது போல அவள் ஜாலி டே நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நெல்லையில் ஃபிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வளாகத்தில், ஆகஸ்டு 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ஜாலி டே கோலாகலமாக நடந்து வருகிறது. `கலக்கப்போவது யாரு’ பாலா, விழாவை கலகலப்பாக்கினார். அவரோடு சேர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் திபிகாஷியும் வாசகிகளை மகிழ்வித்தார்.
ஃபிரான்சிஸ் சேவியர் பள்ளியில் 6-ம் தேதி நடந்த, முன்தேர்வில் பாட்டு, நடனம், நடிப்பு, ரேடியோ ஜாக்கி, வீடியோ ஜாக்கி, ரங்கோலி, மெஹந்தி, கவிதைப்போட்டி, அடுப்பில்லா சமையல், பட்டிமன்றம் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் வாசகியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதில் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் இன்று (7-ம் தேதி) நடந்த இறுதிப் போட்டியில் முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
பாடல், நடனம், கவிதை என அனைத்து அம்சங்களிலும் வாசகிகள் பட்டையைக் கிளப்பியதை, சக போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பாராட்டி மகிழ்ந்தார்கள். அவள் வாசகிகள் திருவிழாவான ஜாலி டே நிகழ்ச்சிக்காக காலை 9 மணிக்கு வரத் தொடங்கிய வாசகிகள் கூட்டம், நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கியது.
சத்யா வழங்கும் அவள் ஜாலி டே நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களான, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், சேவரிட் பாஸ்தா மற்றும் அசோசியேட் பார்ட்னர்களான சுப்ரீம் பர்னிச்சர்ஸ், கலர்ஸ் தமிழ், ரேடியோ பார்ட்னர் சூரியன் எஃப் எம், மா டிவி உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர். விளம்பரதாரர்கள் அமைத்திருந்த அரங்கங்களிலும் வாசகியர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஶ்ரீராம் அகாடமி பரத நாட்டியக்குழுவினர் சத்யா மற்றும் சுபசங்கரியின் பரதநாட்டியம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஹேமலதா, ஃபிரான்சிஸ் சேவியர் பள்ளியின் முதல்வர் பத்மினி கிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர்.
புலிகள் காப்பக துணை இயக்குநர் ஹேமலதா பேசுகையில், “பெண்கள் முயன்றால் எதையும் சாதிக்க முடியும். அதற்கு நானே உங்கள் முன்பாக உதாரணமாக இருக்கிறேன். வனத்துறையில் பெண்கள் வேலை செய்வது கடினமானது என்பதை மாற்றி, நம்மாலும் அதில் சாதிக்க முடியும் என்பது போல வனங்களையும் அதில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்கும் பணியில் என்னைப் போல பல பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.
பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அவள் விகடன் மூலம் ஒவ்வொருவருக்கும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை சரிவரப் பயன்படுத்தி அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்” என நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். விகடன் முகவர்களான சீதாலட்சுமி மற்றும் பேராட்சி செல்வி ஆகியோரும் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டனர்
கலக்கப்போவது யாரு பாலா மற்றும் விக்கி சிவாவின் மிமிக்ரியால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பல கலை நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. வாசகிகள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மாலை வரை நடக்குவுள்ள அவள் ஜாலி டே நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என வாசகிகளின் உற்சாகம் தொடர்கிறது.