உடல் நலக்குறைவுக் காரணமாக தன்னைபோல் தோற்றம் உள்ள ஒருவரை (body double) தனக்கு பதிலாக பொது இடங்களில் புதின் பயன்படுத்துகிறார் என்று உக்ரைன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாட்களை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் கொடும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரையில் 4800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தங்கள் நாட்டில் இனி வாழ முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயரும் உக்ரைனியர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது.
ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. உச்சபட்சமாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தடைவிதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளை முன் நகர்த்தாமல் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது.
இவ்வாறான சூழலில்தான் புதின் பற்றிய சர்ச்சையான தகவலை உக்ரைன் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைனின் உளவுப்பிரிவு தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் பேட்டொ ஒன்றில் கூறும்போது, “
ரஷ்ய அதிபர் புதின் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன்பொருட்டு அவர் பொதுவெளியில் நடமாடாமல் இருப்பதற்காக பாடி டபுள்களை (புதினை போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு நபர்) பயன்படுத்துகிறார். இதற்கு சான்றாக புதின் சமீபத்திய புகைபடங்களில் அவரது காதுகளின் நீளம் மாறுப்பட்டுள்ளதை காணலாம்” என்றார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் புதனிக்கு புற்றுநோய் தாக்கம் இருப்பதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ரஷ்யா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதின் பற்றி புதிய தகவலை உக்ரைன் பகிர்ந்துள்ளது.