மதுரை: மதுரை விமானநிலையம் விரிவாக்க திட்டப் பணிகளுக்காக இன்னும் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியதைத் தொடர்ந்து இந்த திட்டத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தொழில்துறையினர், பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையமாக செயல்படுகிறது. மதுரை விமான நிலையம், துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானவை சேவை கொண்டுள்ளதால் தற்போது வரை சுங்க விமான நிலையமாக (customs airport) செயல்படுகிறது.
தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் துபாய், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மட்டுமில்லாது மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு வேலைவாய்ப்பு, வியாபாரம் ரீதியாக சென்று வருகின்றனர். தற்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்கு மதுரை விமான நிலையத்தை பயன்படுத்த முடியாமல் சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்களுக்கு செல்கின்றனர். அதுபோல் பழங்கள், மல்லிகை உள்ளிட்ட நறுமணப்பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள்கூட மற்ற விமான நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் சர்வதேச அளவிலான விமானங்கள் வந்து செல்வதற்காக ரன்வேயின் நீளத்தை அதிகரிப்பது, கூடுதல் டெர்மினல்கள் ஏற்படுத்துவதற்கான விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. விமானநிலையத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து இங்கு நேரடியாக இயக்கலாம். ஆனால் ஓடுதளம் சிறியதாக இருப்பதால் மதுரையை சர்வதேச விமான நிலையமாக்கும் திட்டம் தள்ளிப்போகிறது.
ஆரம்பத்தில் தரைத்தளத்திலே விமானநிலையம் ரன்வேயை 7,500 அடி நீளத்திற்கு அதிகப்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்கு போதுமான நிலத்தை கையகப்படுத்துவதிலும், விமானநிலையம் ரன்வே நீடிப்பு பகுதியில் மதுரை-திருநெல்வேலி நான்குவழிச்சாலை சென்றதால் விரிவாக்கம் செய்யும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சம், ரன்வேக்கு கீழே அன்டர் கிரண்டு ரோடு போடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழக அரசு 633.17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. ஆனாலும், விரிவாக்கம் திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டதால் இதுதொடர்பாக தேனி எம்பி ரவீந்திரநாத், மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் கொடுத்த விமானப் போக்குவரத்துறை அமைச்சகம், “தமிழ்நாடு அரசிடம் 633.17 ஏக்கர் நிலத்தை கேட்டதாகவும், அதில் 543.41 ஏக்கர் நிலம் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 89.76 ஏக்கர் நிலம் தமிழக அரசால் ஒப்படைக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறது.
மத்திய அரசின் இந்த பதிலால், மதுரை விமானநிலையம் விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு போதுமான நிலத்தை இன்னும் கையகப்படுத்தி ஒப்படைக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், இந்த திட்டத்தில் உண்மையிலேயே என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தென் மாவட்ட தொழில்துறையினர், பொதுமக்கள் குழம்பி போய் உள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ”ஆரம்பத்தில் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் மத்திய அரசு வாரணாசி, மைசூர், மதுரை போன்ற விமான நிலையங்களில் ஜெர்மன் முறையில் ரன்வேயை நீட்டிக்க அனடர் கிரவுண்டு ரோடு போடும் திட்டத்தை அறிவித்து இருந்தது. ஆனால், தறபோது இந்த ரன்வே திட்டத்திற்கு ரூ.420 கோடி ஆகுவதால் மத்திய அரசு மீண்டும் திட்டத்தை மாற்றி பழைய மாதிரியே திட்டமிடப்பட்டபடி தரைத்தளத்திலே ரன்வேயை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
ஆனால், தமிழக அரசு, ஆரம்பத்தில் கூறிய 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது மீண்டும் திட்டத்தை மத்திய அரசு மாற்றுவதால் கூடுதல் நிலம் கையகப்படுத்தி கேட்கிறது. நிலம் கையகப்படுத்த வேண்டிய இடத்தில் 2 நீர்நிலைகள் வருகிறது. இதற்கு மாநில அளவில் கமிட்டி வைத்து நிலம் கையகப்படுத்துவதை ஒழுங்குப்படுத்த வேண்டும். தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலம் அடிப்படையில் ரன்வேயை விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் இந்த திட்டம் தாமதமாகிறது.
மேலும், தற்போது சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள் பற்றாக்குறையால் சென்னையில் இருந்து கூட இரவு மதுரை திரும்ப முடியவில்லை. அதை நான் மத்திய விமானத்துறை அமைச்சகத்திடம் முறையிட்டப்போது இந்த விஷயத்தில் கொள்கை முடிவில் மாற்றம் கொண்டு வந்து உள்ளூரிலே ஏஜென்சிகளை கொண்டு பாதுகாப்புக்கு ஆட்களை தேர்வு செய்து விமானங்களை இயக்கும் திட்டம் உள்ளது என்று கூறியது. ஆனால், தற்போது வரை மத்திய அரசு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. மொத்தமாக தமிழக அரசு மீது பழியை தூக்கிப்போட்டு மத்திய அரசு இந்த திட்டத்தில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது” என்றார்.