2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு… 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம் – என்ன நடக்கிறது மணிப்பூரில்?

மணிப்பூர் மாநிலம், பிஷ்னுபூர் பகுதியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினார் அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்றுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் அந்த வேனிலிருந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையேயான மோதல் மிகப்பெரிய இனக் கலவரமாக மாறியது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் உருவானது. வகுப்புவாத கலவரம், வன்முறை சம்பவங்கள் நிகழலாம் என்பதால் போலீஸார் அதிக அளவில் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தின் வளரச்சிக்காக ‘மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா 2021’-ஐ சட்டசபையில் தாக்கல்செய்ய வேண்டும் என மாநிலத்தின் ‘மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம்’ சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதையடுத்து, மாநில அரசு மணிப்பூர் (மலைப் பகுதிகள்) மாவட்ட கவுன்சில் 6 மற்றும் 7-வது திருத்த மசோதாக்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஆனால், மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கத்தின் அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக்கூறி, தேசிய நெடுஞ்சாலைகளில் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த மாணவர் சங்கத்தின் போராட்டத்தைக் கண்டித்து மற்றொரு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாகவே இந்தக் கலவரம் வெடித்தது.

மணிப்பூர் கலவரம்

இந்த நிலையில், இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன. பிஷ்னுபூர் மாவட்டத்தில் நேற்று மாலை வேன் தீ வைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கலவரம்

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் இருக்கக்கூடிய காரணத்தினால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.