தென்காசி: தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதல் சாரல் திருவிழா, நேற்று முன்தினம் குற்றாலத்தில் துவங்கியது. 2வது நாளான நேற்று காலை ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கியது. கலெக்டர் ஆகாஷ், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். மலர்கள், பழங்கள், காய்கறிகள் மூலம் யானை, வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட ஏராளமான உருவங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்காட்சியில் அரியவகை பழங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்டவைகளும் இடம்பெற்றிருந்தன. இலவங்கம் மற்றும் வாசனை திரவிய பொருட்களான கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, கசகசா, குறுமிளகு, ஏலக்காய், வெள்ளை குறு மிளகு, ஜாதிபத்திரி, சீரகம், சோம்பு, மல்லி, கருஞ்சீரகம், மிளகாய் விதை, வெந்தயம், அன்னாசி பூ, மராட்டி மொக்கு உள்ளிட்ட 17 வகையான பொருட்களைக் கொண்டு 7 அடி உயரம், 13 அடி நீளம் 3.5 அடி அகலத்துடன் டெல்லி செங்கோட்டை போன்ற வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. மலர் கண்காட்சியில் பல்வேறு மலர்களைக் கொண்டு பொதிகை மலை அகத்திய முனிவர் உருவம், முத்தமிழ் சங்கத்தின் இயல் இசை நாடகம், குழந்தைகளை கவரும் கார்ட்டூன் கேரக்டர்கள், பரதநாட்டிய மங்கை, பார்பி பொம்மை உள்ளிட்டவை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் டாலியா, கார்னேசன், ஜெர்பரா, ஆஸ்டர், கட் ரோசஸ், ஹெலிகோனியா, லில்லி, கட்கிரிசாந்திமம், ட்யூப் ரோஸ், பேர்ட் ஆப் பாரடைஸ், அல்ஸ்ட்ரா மெரியா, கிளாடியோலஸ், மெரி கோல்ட் ஆகிய மலர்களைக் கொண்டு செய்யப்பட்டிருந்தது.காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி உழவர் கையில் பூமி உருவம், வரையாடு, மரகத புறா, வண்ணத்தோகை மயில்கள், மஞ்சப்பை உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் மா, கொய்யா, நெல்லி, டிராகன் பழம், சப்போட்டா, நோனி, வாழை, எலுமிச்சை, அவகேடா, தக்காளி, கத்தரி, வெண்டை, பல்லாரி வெங்காயம், பாகற்காய், சுரைக்காய், மிளகாய், சிறுகிழங்கு, மரவள்ளி கிழங்கு, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.