புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று திமுக நிர்வாகிகளிடம் மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி மாநில திமுக சார்பில் கருணாநிதி 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து திமுகவினர் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் ஒதியஞ்சாலை அண்ணா சிலைக்கு பேரணியாக வந்தனர். பின்னர் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏ-க்கள் அனிபால் கென்னடி சம்பத், செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது, முதல்வர் ரங்கசாமியிடம் புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி: “கலைஞருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும், நட்பும் இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு, எனவே புதுவை அரசு சார்பில் கலைஞருக்கு புதுவையில் சிலை நிறுவப்படும்” என்று முதல்வர் உறுதியளித்தார்.