கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை திம்மாச்சிபுரம், தவிட்டுப்பாளையம் மற்றும் அரங்கநாதன் பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரப் பகுதியில் பல்வேறு முன்னேற்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், காவிரி ஆற்றோர பகுதி குடியிருப்பில் குடியிருந்த 150 குடும்பங்கள் பத்திரமாகச் சமுதாயக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் முன்னேற்பாடுகள் பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, பொதுமக்களுக்கு உணவுகள் மற்றும் நிவாரண பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 332 நபர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, பாய் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதன்பேட்டையில் மூன்று குடும்பங்களும், குளித்தலை சட்டமன்றத் தொகுதி திம்மாச்சிபுரம் பகுதியில் இரண்டு குடும்பங்களும் மழை நீரால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரணம் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற குடிநீர் திட்டப்பணிகள் தங்கு தடையின்றி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திடவேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், 188 இடங்களில் மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டிருந்தன.
அவற்றை நேற்று மாலைக்குள்ளேயே சரி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தெரிவிக்கப்பட்டது. அதுவும் மாலைக்குள்ளே சரி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தவுட்டுப்பாளையம் பகுதியில் கரையோரத்தில் வசிக்கும் 26 குடும்பங்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு உடனடியாக மின் விநியோகம் வழங்கப்படும். பிறபகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மின் வினியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, காவிரிக் கரையோரம் மட்டுமல்லாமல் நீலகிரி அல்லது கன்னியாகுமரி மாவட்டமாக இருந்தாலும் உயர் அதிகாரிகள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு சீராக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, நீலகிரி மாவட்டத்தில் மரம் சாய்ந்ததால் ஏற்பட்ட பழுதுகள் சரிசெய்ய 150 மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ 5,000 இணைப்புகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பழுதுகள் சரி செய்யப்பட்டு… மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாய பகுதிகளில் எந்தவித சேதமும் பாதிப்பும் இல்லை. தவுட்டுப்பாளையம் பகுதியில் தண்ணீரால் வீடுகள் பாதிக்காத அளவிற்குத் தடுப்புச் சுவர் வேண்டும் என்று கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் சொல்லப்பட்டு, ரூ.20 கோடி அளவிற்குத் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கான, நிதி ஆதாரத்தைப் பெற்று டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் இரண்டு கட்டங்களாகத் தொடங்கப்பட இருக்கின்றன”என்றார்.