“MGR -ஐ பெயர் சொல்லி அழைப்பார்; ஆனால், ஜெயலலிதாவை…” – கருணாநிதி தனிச்செயலர் ராஜமாணிக்கம்

கலைஞர் கருணாநிதியின் பர்சனல் செகரட்டரியாக 20 ஆண்டுகள் பயணித்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ராஜமாணிக்கம். அறிக்கைகள், சட்டத் திட்டங்களை கலைஞர் உருவாக்குவதில் ஆரம்பித்து ஆல் இன் ஆல் ஆலோசகராக இருந்தவர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு கேள்விகளுடன் ராஜமாணிக்கத்தை டிபன்ஸ் காலனியிலுள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினோம்…

கலைஞர் கருணாநிதி இல்லாத இந்த நான்கு ஆண்டுகள்?

“குடும்பத்தோடு இருந்தாலும்கூட தலைவர் இல்லாதது தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி இருக்கிறது. நான் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவன். எனக்கு ஒரு தந்தையாக, தலைவராக, எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் போன்றவர் கலைஞர். அவருடன் இறுதி மூச்சு இருக்கும்வரை இருந்தேன். ஆனால், அவர் இல்லாத இந்த நான்கு ஆண்டுகள் வெறுமைதான். எங்கும் செல்வதில்லை. செய்திதாள்களை வாசிப்பது, புத்தகம் படிப்பது என வீட்டிலேயே நாட்கள் கழிகின்றன. எப்போதாவது நினைவிடத்திற்கும் அம்மாவைப் பார்க்க கோபாலபுரமும் சென்று வருவேன்”

அவரின் நினைவாற்றல் குறித்து?

“அவரது நினைவாற்றல் அமானுஷ்யமான நினைவாற்றல். நான் பார்த்த மனிதர்களில், படித்த பெரும் தலைவர்களில் கேள்விப்பட்டதைவிட மிக அதிகமான நினைவாற்றல் உள்ளவர். அதுமட்டுமல்ல, ஐன்ஸ்டீனுக்கு ஐக்யூ அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருக்கு இணையான ஐக்யூ உடையவர் என்று டாக்டர் அம்பேத்கரை சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை ஐன்ஸ்டீனுக்கு நிகராக, அம்பேத்கருக்கு நிகராக ஐக்யூ உள்ளவர் கலைஞர். எல்லா விஷயத்தையும் நினைவில் பதிவு செய்திருப்பார்”

கலைஞருக்கு பேனா சிலை… எப்படி பார்க்கிறீர்கள்?

“அவருக்கு அடையாளமே பேனாதான். `எனது செங்கோல் போனாலும் எழுதுகோலை யாராலும் பறிக்கமுடியாது’ என்று பேனாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இறுதிவரை எழுதிக்கொண்டிருந்தவர். அதனால், அந்தப் பேனா முக்கியமானது. பேனாவையும் அவரையும் பிரித்துப் பார்க்க முடியாது”.

கலைஞர், ராஜமாணிக்கம்

ஜெயலலிதாவிடம் இருந்து அறிக்கை வரும்போது எப்படி ரியாக்ட் செய்வார்?

“ஏதாவது முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் குறித்து ஜெயலலிதா எதாவது சுட்டிக்காட்டினால், அந்த முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் அவருக்கு வரும். ஏனென்றால், அரசின் திட்டம் என்பது 100 கைகளைத்தாண்டி வருவது. சின்ன தவறு நடந்தால்கூட பெரிதுப்படுத்தி அறிக்கைகள் கொடுப்பார்கள். அதனை சரிசெய்யவேண்டும் என்றுதான் நினைப்பார். கோபப்படமாட்டார். அந்த பிரச்னையில் வேகத்தைக் காட்டுவார். உடனடியாக பதில் சொல்லுவார். தானே அறிக்கைகளை தயார் செய்வார். இல்லாவிட்டால் தொடர்புடைய அமைச்சர்களிடம் பதில் சொல்ல சொல்வார். அந்தப் பதிலைக்கூட அவர் பார்த்து சரிசெய்த பிறகே வெளிக்கொண்டுவர வைப்பார். சீனியர் அமைச்சர் ஆச்சே என்றெல்லாம் விடமாட்டார்”.

அவரது ஆட்சி நிர்வாகத்தில் நீங்கள் வியந்து பார்த்த விஷயம்?

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் அமைச்சரவை தீர்மானம் அவரே கைப்பட எழுதிய தீர்மானம். ஒரு முதல்வரே தீர்மானத்தை எழுதி நான் இதுவரை கேள்விப்பட்டது கிடையாது. அதேபோல, பெரியார் நினைவு சமத்துவபுரம் தீர்மானமும் அவரே எழுதியதுதான். இதில், எனக்கு பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் வியப்பானது. எல்லோரும் சமம் என்பதற்காக அனைத்து சாதியினரும் ஒன்றாக வசிக்கும்படி சமத்துவபுரங்களை அமைத்துக்கொடுத்தார்”

கருணாநிதி அதிகம் ஈடுபாடு காட்டும் துறை என்றால் எதை சொல்வீர்கள்?

“சமூகநலத்துறைதான். சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் உதவியாக இருக்கக்கூடியது சமூக நலத்துறை. அந்தத் துறையில்தான் அவர் அதிகம் நாட்டம் காட்டுவார். அது அவருக்குப் பிடித்தமான துறை”.

அமைச்சர்கள் கூட்டம்… ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கூட்டம் நடந்தால் யாரிடமாவது ஆலோசனைகள் கேட்பாரா?

“கருத்து சொல்ல விரும்புகிறவர்களையெல்லாம் கருத்துச் சொல்லக் கேட்பார். அதேசமயம், நாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று திணிக்கமாட்டார். யாரும் கருத்து சொல்லாமல் இருந்தாலும் பெயரை குறிப்பிட்டு ‘என்ன நினைக்கறீங்க’ன்னு கேட்பார். அவரது எல்லா அமைச்சர்கள் கூட்டமும் சுவாரசியமாக இருக்கும். அப்படி இல்லையென்றாலும் அவரே சுவாரசியப்படுத்திடுவார்”.

கலைஞருடன் ராஜமாணிக்கம்

அவரது டைமிங் காமெடி குறித்து?

“திடீர் திடீனு மின்னல் மாதிரி டைமிங் காமெடி சொல்வார். இறுக்கமான சூழ்நிலையையும் நகைச்சுவை மூலம் தளர்த்துவார். அது புதுமையாகவும் இருக்கும். எல்லோரையும் சுமுகமான மனநிலைக்கும் கொண்டுவந்துவிடும்”.

நீங்கள் புதிய ஆலோசனை சொல்லும்போது பாராட்டியுள்ளாரா?

“புதுமையாக என்ன விஷயத்தை சொன்னாலும் பாராட்டுவார். ஆனால், புதுமையான விஷயங்கள் என்பது அவருக்கு மேல யோசிப்பதுதான். நம்மளால அவருக்கு மேலல்லாம் யோசிக்க முடியாது. அவரே எடுத்த எடுப்பில் 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவர். அவர் மாதிரி வேகத்திற்கு ஈடுகொடுத்துச் சொன்னவர்கள் கிடையாது”.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை விமர்சித்ததுண்டா?

“அறிக்கை மூலம் ஏதாவது சொல்லியிருந்தால், அதற்கு பதில் தயார் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பாரே தவிர, எதிர்கட்சியினர் மீதான விமர்சனங்களை அவர் செயலாளர்களிடம் பேசமாட்டார். அவர்களைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளமாட்டார். எம்.ஜி.ஆர் மீதும் ஜெயலலிதா மீதும் மிகப்பெரிய மதிப்பீடுள்ளவர். எல்லோரும் வெளியில் இருந்து பார்ப்பது மாதிரியெல்லாம் கிடையாது. நாமெல்லாம் சாதாரணமாக பேசுகின்ற மாதிரி பெயரைவிட்டெல்லாம் ஜெயலலிதா என்று சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர்ரைக்கூட எம்.ஜி.ஆர் என்பார். ஆனால், ஜெயலலிதாவை ’ஜெயலலிதா அம்மையார்’ என்றுதான் அழைப்பார். அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டப்போதுகூட கோபமோ சங்கடமோ பட்டது கிடையாது. சரியான பதில் அளிக்கணும் என்றுதான் நினைப்பார்”.

கலைஞர், சண்முகநாதனுடன் ராஜாமாணிக்கம் ஐ.ஏ.எஸ்

ஜெயலிதாவின் அதிரடி அரசியல் பாணி கலைஞரிடம் இல்லை என்ற விமர்சனம் உள்ளதே?

“அரசியல் அதிரடிக்கான களம் இல்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். சினிமாவில் வேண்டுமென்றால் அதிரடியாக ஒரு சஸ்பென்ஸ் சீனை உருவாக்கலாம். ஆனால், அரசியலில் சஸ்பென்ஸ் வைத்து அதிரடி காட்டவேண்டும் என்று நினைத்ததில்லை. எவ்வளவோ சஸ்பென்ஸ் சீன்கள் எல்லாம் எழுதியிருப்பார். அவருக்குத் தெரியாததா?”.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பத்தாண்டுகள் குறித்து?

“அந்தப் பத்தாண்டுகள் மிகவும் சுமுகமாக இருந்தது. தமிழகத்தில் கலைஞரைக் கேட்டுத்தான் மத்திய அரசே செயல்படும். தேசிய அரசியலில் அப்படியொரு முக்கியமான பங்கை வகித்திருக்கிறார். பல்வேறு தலைவர்கள் வந்து சந்தித்துள்ளார்கள். மிக முக்கியமான அரசியல் சூழலில் தேசிய அரசியலை நாடும்போது நம்ம மாநிலத்திற்கு, அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிட்டுத்தான் முடிவெடுப்பார்”.

மதவாதம், வெறுப்பரசியல் போன்றவற்றை கலைஞர் அன்றைய காலகட்டங்களில் எப்படி கையாண்டார்?

“அப்போதெல்லாம் இதுபோன்று இல்லை. வெறுப்பு இருந்தாலும் சமாதானமாக அமைதியான முறையில் பிரசார ரீதியாகத்தான் செய்வார்கள். இப்போ, சாதி, மதவெறுப்பு அதிகமா இருக்கு. தமிழகத்தில் அதனை பெருமளவு ஒழித்தது திராவிட இயக்கம்தான்”.

கலைஞர் உங்களுக்கு கொடுத்த மறக்கமுடியாத பரிசு?

”அவரின் பிறந்தநாளின்போது ஒரு சவரன் டாலர் கொடுத்தார். அது அப்படியே பொக்கிஷமாக இருக்கிறது”.

கலைஞருடன் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்

கலைஞருக்கு மிகவும் பிடித்தமான அமைச்சர்?

“அப்படி யாரும் கிடையாது. ஆனால், துரைமுருகனை செல்லமா துரைன்னுதான் கூப்பிடுவார். ஜெகத்ரட்சகனை ஆழ்வார்னு கூப்பிடுவார். ஆனால், அதற்காக நெருக்கம் என்று முடிவு செய்துவிட முடியாது. எல்லாரிடமும் ரொம்ப நெருக்கமாகவும் இருப்பார். விலகியும் இருப்பார்”.

ஸ்டாலின் ஓராண்டு ஆட்சி குறித்து?

“அண்ணா, கலைஞரின் ஆட்சியையொட்டி வந்த ஆட்சியாகத்தான் இதனைப் பார்க்கவேண்டுமே தவிர பிரத்யேகமாக மதிப்பீடு செய்யக்கூடாது. இது பெரியார், அண்ணாவின் தொடர்ச்சி. இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சியின் தொடர்ச்சி. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி எல்லோருக்கும் இணக்கமான வளர்ச்சியை எடுத்துச் செல்கிறது”.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.