புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகளியின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 23 மாநில முதல்-மந்திரிகள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது.
ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது” என்று அவர் தெரிவித்தார்.