ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்குகரை பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.
காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி மேலும் சில ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் காசா முனையில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் என்ற பயங்கரவாத அமைப்பு ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பு ஹமாஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரு அமைப்புகளின் நோக்கங்களும் வேறு. இஸ்ரேலுடன் எந்த வகையிலும் இணக்கமாக செல்லக்கூடாது என்ற கொள்கையை பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு தனது கொள்கையாக கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஈரானின் உதவியுடன் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் தரவுகள் அடிப்படையில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பில் 1,000 முதல் சில ஆயிரம் பயங்கரவாதிகள் இருக்கலாம். இந்த அமைப்பை அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக ஜியக் அல் நக்ஹலா உள்ளார். ஹமாஸ் போன்று அல்லாமல் தேர்தலில் பங்கேற்க இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு விரும்பவில்லை. இந்த பயங்கரவாத அமைப்பு மேற்குகரை பகுதியிலும் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது.
இதனிடையே, பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகத் அமைப்பின் மூத்த தளபதியை கடந்த வாரம் மேற்குகரையின் ஜெனின் பகுதியில் இஸ்ரேல் கைது செய்தது.
இந்த கைதை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்குகரை பகுதியில் அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்குகரையில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டார். தைஷர் அல் ஜபரி மேற்குகரையின் வடக்கு பகுதியில் உள்ள பிரிவுக்கு தளபதியாக இருந்து வந்துள்ளார். இந்த தாக்குதலில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர். இதில், பயங்கரவாத அமைப்பினர், குழந்தைகளும் அடக்கம்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது காசாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது.
அதேபோல், காசா முனையில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மேலும் ஒரு தளபதி கொல்லப்பட்டார். இந்த வான்வெளி தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காசா முனையின் தெற்கு பகுதியில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின்ன் தளபதியாக இருந்த ஹலித் மன்சூர் கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பு மட்டுமே இதுவரை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஹமாஸ் அமைப்பு நேரடியாக களமிறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஹமாஸ் அமைப்பு போன்று பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பிடம் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டுகள் கிடையாது. ஆனால், குறுகிய தூர ராக்கெட்டுகள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்பட ஆயுதங்களை இந்த அமைப்பு கொண்டுள்ளது.
மேலும், இந்த அமைப்பின் ஆயுதக்குழு பிரிவு அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் அல்லது ஜெருசலேம் பிரிகெடிஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த குழு கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் பொதுமக்கள், ராணுவம் மீது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.
தற்போது பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என கிடைத்த தகவல்களை தொடர்ந்து காசா முனையில் உள்ள அந்த அமைப்பு மீது இஸ்ரேல் அதிரடி வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் 2 தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 250 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2021 மே மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் வெடித்தது. இதில் இஸ்ரேல், காசா முனை, மேற்குகரையில் 11 நாட்கள் நடந்த மோதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் மீண்டும் போர் மூளும் அச்சம் ஏற்பட்டுள்ளது.