உண்மையை உடைத்த எஸ்.பி.. அயோத்தியில் நிலங்களை அபகரித்த புகாரில் சிக்கிய பாஜக எம்எல்ஏ, மேயர்

அயோத்தியா பகுதியில் சட்டவிரோதமாக நிலங்களை அபகரித்த புகாரில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த பின் அந்த இடத்தின் அருகே பல ஏக்கர் நிலங்களை பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மேயர்களின் உறவினர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் இணைந்து அபகரித்து வருகின்றனர் என பலரும் புகார் தெரிவித்தனர். காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இதனைத்தொடர்ந்து  இந்த நில அபகரிப்பு புகார் குறித்து வருவாய்த் துறை சிறப்பு செயலர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஆண்டு இறுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், விசாரணைக் குழுவின் துணை தலைவர் விஷால் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அயோத்தியா பகுதியில் சட்டவிரோத வகையில் நிலம் வாங்கி, விற்பனை செய்து, அவற்றில் கட்டுமான பணியிலும் ஈடுபட்ட 40 பேர் கொண்ட பட்டியல் கிடைத்து உள்ளது. அவர்கள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

image
இந்த பட்டியலில், பாஜக எம்.எல்.ஏ. வேத் பிரகாஷ் குப்தா, பாஜக மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் அக்கட்சியின் மில்கிபூர் தொகுதியை சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினரான கோரக்நாத் பாபா என்பவரும் உள்ளனர். அயோத்தியாவில் நில அபகரிப்பு கும்பலுடன் சேர்ந்து கொண்டு பாஜகவின் மேற்குறிப்பிட்ட 3 பேரும் சட்டவிரோத காலனிகளை உருவாக்கி உள்ளனர் என எஸ்.பி. ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் அம்பலப்படுத்தி உள்ளார். இதன்படி, அந்தந்த துறைகளின் உதவியுடன் சட்டவிரோதமாக 30 காலனிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

இதனால், அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஷால் சிங் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். நில அபகரிப்பு புகாருக்குள்ளான இவர்கள் அனைவரது வீடுகளிலும் நேற்று இரவு முதல் உத்தர பிரதேச போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் ஏற்பட்ட காதல் – இளைஞர் போக்சோவில் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.