9 மாநிலங்கள்… ரூ.1 லட்சம் கோடிக்கு இலவசத் திட்டங்கள்… எங்கே போகிறது நம் நாடு?

நம் நாட்டில் அனைத்து மக்களுக்கும் இன்னும் சரியான சாலை வசதி கிடைத்துவிட்டதா என்றால், இல்லை. அனைத்து மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைத்துவிட்டதா என்றால், இல்லை. அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்துவிட்டதா என்றால், இல்லை. ஆனால், ஒன்பது மாநிலங்கள் தங்கள் மாநில மக்களுக்கு ரூ.1 லட்சம் கோடி ரூபாய்க்கு இலவசத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.

கடன்

மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ற போதுமான அளவு நிதி ஆதாரம் இல்லை என மாநில அரசாங்கங்கள் ஒரு பக்கம் உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இப்படி எக்கச்சக்கமாக இலவசத் திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தியும் கொண்டிருக்கின்றன. மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயித்து, ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இலவசத் திட்டங்களை அறிவிக்கின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்கின்றன.

இந்த ஆண்டில் மட்டும் அரசியல் கட்சிகள் இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக செய்யப் போகும் செலவு ஏறக்குறைய ரூ.1 லட்சம் கோடி என்று சொல்லி இருக்கிறது நமது மத்திய ரிசர்வ் வங்கி. அந்த வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சொல்லப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் பார்ப்போம்.

நிதிப் பற்றாக்குறை

முதலிடத்தில் மூன்று மாநிலங்கள்….

ஆந்திரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டுமே தேர்தலுக்கு முன்பு அறிவித்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.67,000 கோடியைத் தங்கள் மாநில பட்ஜெட்டில் ஒதுக்கி இருப்பதால ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.

இதில் ஆந்திரா மட்டுமே ரூ.27.541 கோடி ஒதுக்கி இருக்கிறது. இது அந்த மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையில் 3.64% ஆகும். அதே போல, மத்தியப் பிரதேச மாநிலம் ரூ.21,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இது அந்த மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறையில் 4.56% ஆகும். மேற்கு வங்காளம் ரூ.18,877 கோடியை ஒதுக்கியுள்ளது. இது அந்த மாநிலத்தின் 3.64% ஆகும்.

ராஜஸ்தான் மாநிலம் ரூ.8,480 கோடியும், ஜார்க்கண்ட் ரூ.6,655 கோடியும், பீகார் ரூ.1,300 கோடியும், அரியானா ரூ.639 கோடியும், கேரளா ரூ.50 கோடியும் மக்களுக்கான இலவசத் திட்டங்களுக்கு ஒதுக்கி இருக்கிறது.

மின்சாரம்

மின்சார மானியம் தரும் ஷாக்…

இலவசத் திட்டங்கள் அளிப்பதில் மாநில அரசாங்கங்கள் பெருமளவு பணத்தை செலவு செய்வது இலவச மின்சாரத்தை வழங்குவதில்தான். மத்தியப் பிரதேசம் மட்டும் மின்சார மானியம் அளிப்பதற்காக ரூ.21,000 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ரூ.6,655 கோடியும், ஆந்திரா ரூ.5,000 கோடியும், பஞ்சாப் ரூ.5,000 கோடியும் ராஜஸ்தான் ரூ.4,500 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளன.

கடன் வாங்கவேண்டிய கட்டாயம்…

மாநில அரசுகளின் பொருளதாரம் நன்கு இருக்கும்போது, இலவசத் திட்டங்கள் மற்றும் மானியத்துக்கான நிதியைத் திரட்டுவதில் பெரிய பிரச்னை இருக்காது. ஒருவேளை, இந்த நிதியைக் கடனாக வாங்கினாலும், பிற்பாடு எளிதில் கட்டி முடித்துவிடும். ஆனால், நிதி ஆதாரம் சரியாக இல்லாத மாநிலங்களில் இப்படி எக்கச்சக்கமாக இலவசத் திட்டங்களை அறிவிக்கும்போது, உலக வங்கி போன்ற பல்வேறு அமைப்புகளிடம் கடன் வாங்கித்தான் அவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

கடன்

அப்போது அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய கட்டாயமும் மாநில அரசாங்கங்களுக்கு ஏற்படும். ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி சரியில்லாத நிலையில், அதிக வட்டியில் கடன் வாங்கினால், அதை அந்த அரசாங்கங்கள் திருப்பித் தரமுடியாத நிலை ஏற்பட்டு, கடன் வலையில் சிக்கும் அபாயத்தில் மாட்டிவிடுகின்றன. இன்றைக்கு பஞ்சாப், ராஜஸ்தான் என 10 மாநிலங்கள் இந்தக் கடன் வலையில் சிக்கித் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றன.

இலவசத் திட்டங்கள் தவறா?

ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் இந்தப் புள்ளிவிவரங்களை எல்லாம் பார்க்கும்போது, மாநில அரசாங்கங்கள் இலவசத் திட்டங்களுக்கான செலவு செய்வதையும், மானியங்கள் அறிவிப்பதையும் தவறா என்கிற கேள்வி எழுகிறது. இலவசத் திட்டங்கள் அல்லது மானிய உதவி தருவது போன்றவற்றை முழுக்கத் தவறு என்று சொல்லிவிட முடியாது. காரணம், இன்றைக்கு கிராமப் பகுதியில் அடிப்படை வசதி இல்லாமல் பல கோடி பேர் இருக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்பது அவர்கள் வாழ்க்கையில் இன்னும் எட்டிப் பார்க்கக்கூட இல்லை. இந்த நிலையில், அவர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனில், சில உதவிகளை மத்திய அரசாங்கம் செய்து தந்தாகவேண்டும்.

தையல் மிஷின்

உதாரணமாக, கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டும் எனில், அவர்களுக்கு மானிய உதவியில் கேஸ் அடுப்புகளையும், சிலிண்டர்களையும் தந்தாக வேண்டும். அப்படித் தரவில்லை எனில், அவர்களால் முழுக் கட்டணத்தையும் செலுத்தி கேஸ் அடுப்பையும், சிலிண்டரையும் வாங்க முடியாது. அந்த நிலையில், மரக்கட்டைகளை எரித்துத்தான் சமைக்க வேண்டியிருக்கும். இதனால் அவர்களின் சக்தியும், நேரமும் வீணாவதுடன், சுற்றுச்சூழலும் கெடும். எனவே, இது மாதிரியான பல விஷயங்களின் அரசின் இலவசத் திட்டமும், மானியமும் கட்டாயம் தேவை.

ஆனால், உழைத்து முன்னேற வேண்டும் என்கிற சிந்தனையை மழுங்கடுத்து, மக்களை சோம்பேறிகள் ஆக்கும் திட்டங்கள்தான் கூடாது. உதாரணமாக, ‘நாங்கள் ஜெயித்து வந்தால் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் இத்தனை ஆயிரம் மாதந்தோறும் தரும்வோம்’ என அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தன. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு இப்படி உதவி செய்யப்படும் பட்சத்தில், அதில் தவறு இல்லை. ஆனால், எல்லோருக்கும் அளிக்கும்போது அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். இந்த செலவுக்கான பணத்துக்கு தமிழக அரசாங்கம் எங்கே போகும் என்பதுதான் முக்கியமான கேள்வி.

பார்த்துப் பார்த்து செலவு செய்யும் தமிழகம்…

நம் நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, இலவசத் திட்டங்கள் மற்றும் மானியம் வழங்குவதில் தமிழக அரசாங்கம் நன்கு யோசித்தே செயல்படுகின்றன. தமிழக அரசுக்கு ஏற்கெனவே ரூ.5 லட்சம் கோடிக்குமேல் கடன் உள்ளது. ஏற்கெனவே வாங்கிய கடனைக் குறைக்க வேண்டிம்; புதிதாகக் கடன் வாங்கக்கூடாது என்று இரட்டை இலக்குகளை வைத்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயல்படுவதால், இலவசத் திட்டங்கள் மற்றும் மானியங்களுக்கான தொகை குறைந்த அளவிலேயே உள்ளது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தவிர, பல ஆண்டுகளாக தமிழகத்தின் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இப்போது அதை தமிழக அரசாங்கம் செய்திருப்பதன் மூலம் அரசின் வருமானம் அதிகரிக்கும். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சி தருவதைவிட, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் உயர்த்தி, அதை இயல்பாக ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்கலாம். தமிழக அரசாங்கம் இன்னும்கூட கண்ணும் கருத்துமாக செயல்பட்டால், மேலும் பல ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தலாம்!

இலங்கை

இலங்கைக்கு ஏற்பட்ட நிலை…

இலவசத் திட்டங்களை நிறைவேற்றவும், மானியம் அளிக்கவும் மாநில அரசாங்கங்கள் பல லட்சம் கோடி ரூபாயை செலவழித்தால், அந்த மாநிலங்களிங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மை பலவீனம் அடைவதுடன் அது நாட்டின் பொருளாதார நிலையையும் வெகுவாக பாதிக்கும். இந்த நிலை மாறவில்லை எனில், இன்றைக்கு இலங்கைக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு இந்தியாவுக்கும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, மாநில அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் மிக மிக கவனமாக செயல்பட வேண்டியது கட்டாயத்திலும் கட்டாயம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.