கான்பூர்: சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் உத்தரபிரதேச பாஜக அமைச்சர் குற்றவாளி என்று கான்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சர் ராகேஷ் சச்சனிடம் இருந்து கடந்த 1991ம் ஆண்டு சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை போலீசார் மீட்டனர். இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். கடந்த 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்த அவர், 1993, 2002, 2009ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஃபதேபூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது கட்டம்பூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாகவும், முதல்வர் யோகி ஆதித்ய நாத் அமைச்சரவையில் அமைச்சராகவும் உள்ளார். இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நடந்து வந்த சட்டவிரோத துப்பாக்கி வழக்கின் தீர்ப்பை கான்பூர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அதில், அமைச்சர் ராகேஷ் சச்சனை குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியது. இருந்தும் அவர் மீதான தண்டனை குறித்த விபரங்கள் வரும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது அங்கிருந்த அமைச்சர், திடீரென மாயமானார். அதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், நீதிமன்றத்திற்கு வந்தார்.