கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் சுமார் 100 கிமீ வரை பரவியுள்ளது.கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்டதும் தீயைப் பரவாமல் தடுக்கும் முயற்சியில் 17 வீரர்கள் ஈடுபட்டனர். தற்போது அவர்களிடம் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .
தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு வீரர்கள் போராடிக்கொண்டு இருக்கையில் கியூபா நட்பு நாடுகளிடம் உதவியை கோரியுள்ளது. அதன் படி பிற நாடுகள் கியூபா நாட்டின் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு உதவி செய்து வருகின்றனர். காயம் அடைந்தவர்களின் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க்குமென்று கணிக்கப்படுகிறது .
காயம் அடைந்தவர்களில் எரிசக்தி துறை அமைச்சர் லிவன் அர்ரோண்டேவும் அடங்குவார். எண்ணெய் கிடங்கில் தீ பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய சென்ற போது தீக்காயத்தில் சிக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் கிடங்கில் பற்றிய தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது. இதனால், தீயை அணைக்க தொழில்நுட்ப உதவிகள் அளித்து உதவ முன்வருமாறு நட்பு நாடுகளுக்கு கியூபா அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த எண்ணெய்க் கிடங்கு தீப்பிடித்தது கியூபாவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.