புதுடெல்லி: நடப்பாண்டு ஜூலை 15ம் தேதி வரை டெல்லியில் 1,100 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கும் நிலையில், தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மே 18ம் தேதி 13 வயது சிறுமி ஒருவர் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதேபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் ஜூலை 15ம் தேதி வரை 1,100 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 1,033 பெண்கள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்தாண்டு புள்ளி விபரங்களுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு 6.48 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு பெண்கள் மீதான தாக்குதல்கள் வழக்குகள் 1,244 என்ற அளவில் இருந்த நிலையில், நடப்பாண்டில் இதுவரை 1,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இந்தாண்டு மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 2,197 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 1,880 கடத்தல்களை விட இது அதிகமாகும். கடந்தாண்டு முழுவதும், 3,758 பெண்கள் கடத்தப்பட்டனர். பின்னர் அவர்களில் பலர் மீட்கப்பட்டனர். இந்த ஆண்டு புள்ளி விவரங்களின்படி கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவிற்கு பெண்கள் கடத்தல் புகார்கள் அதிகரித்துள்ளன. இந்தாண்டு மட்டும் குடும்ப வன்முறைக்கு 2,704 பெண்கள் ஆளாகி உள்ளனர். கடந்த ஆண்டு 2,096 பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வரதட்ணை கொடுமை தொடர்பாக கடந்தாண்டு 72 பேரும், இந்த ஆண்டு 69 பெண்களும் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டு முதல் ஆறு மாதங்களில் (ஜூன் வரை) பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 6,747 ஆக இருந்தது. அதே நடப்பாண்டு 7,887 ஆக அதிகரித்துள்ளது. மொத்தத்தில், தேசிய தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 17 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.