கோவை: மின் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டால், விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரம் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டுமென மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின்பளு வேண்டி ஆன்லைன் மூலமாக ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கும் நடைமுறையை மின்வாரியம் செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும்போது இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் நுகர்வோர் செலுத்துகின்றனர். இவ்வாறு கட்டணத்தை செலுத்தியபின், மின்வாரிய அலுவலர்கள் ஆவணங்களை சரிபார்க்கும்போது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாமல் இருந்தால், குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பத்தை ரத்து செய்யும் வகையில் மென்பொருள் வடிவமைக்கபட்டுள்ளது. பின்னர், மீண்டும் உரிய ஆவணங்களோடு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், ஏற்கெனவே விண்ணப்பித்து, அந்த விண்ணப்பத்தை ரத்து செய்தபின்னர், நுகர்வோர் செலுத்திய தொகை திருப்பி அளிக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சென்னையிலுள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் (வணிகம்), அனைத்து மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், “விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டாலும், ரத்து செய்யப்பட்ட விண்ணப்பத்துக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டாலும் அதுகுறித்து விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ், நோட்டீஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பம் ரத்து குறித்து தகவல் தெரிவிக்கும்போது, ஆன்லைனில் விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு குறிப்பிட வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்கள் கிடைத்தவுடன், 3 வேலை நாட்களுக்குள் அந்த கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் வரும் 10-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் தவறுகள் நடந்தால், தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மின்வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு கோயமுத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு நன்றி தெரிவித்துள்ளார்.