திண்டுக்கல்: தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள புல்லாவெளி அருவி ஆபத்து மிகுந்ததாக உள்ளது, இதுவரை 14 உயிர்களை காவு வாங்கிய நிலையில் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்து பரமக்குடியை சேர்ந்த இளைஞரை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.
தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவியில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இவர்களில் 13 பேரை மீட்டுள்ள தீயணைப்புத் துறையினர் இருவர் உடலை மீட்கமுடியாத நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் புல்லாவெளி அருவியில் தவறி விழுந்து பரமக்குடியை சேர்ந்த இளைஞரை தேடும் பணி ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான தாண்டிக்கு அருகேயுள்ளது புல்லாவெளி அருவி. திண்டுக்கல்லில் இருந்து 30 வது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மலையடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமம். இங்கிருந்து தாண்டிக்குடி செல்லும் மலைச்சாலையில் 13 கி.மீ., தூரத்தில் உள்ளது புல்லாவெளி மலைகிராமம். இந்த கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில் ஆபத்து மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது புல்லாவெளி அருவி.
புல்லாவெளி மலைக்கிராமப் பகுதியில் முக்கியமாக மலைவாழை, காப்பி, சவ்சவ் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுவருகிறது. மலைச்சாலையில் இருந்து இரு சக்கரவாகனத்தில் மட்டுமே இப்பகுதிக்கு செல்லமுடியும். இதனால் இளைஞர்கள் அதிகளவில் புல்லாவெளி அருவிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அருவிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு புல்லாவெளி அருவியை கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் மரத்தால் அமைத்த தொங்குபாலத்தை கடந்து தான் செல்லவேண்டும். மரப்பாலம் சேதமடைந்துவிட்டதால் தற்போது தற்காலிகமாக தகரத்தை கொண்டு ஆபத்தான பாலத்தை அமைத்துள்ளனர்.
புல்லாவெளி அருவியில் 500 அடி பள்ளத்தில் தண்ணீர் விழுகிறது. இதை அருவியின் மேற்பரப்பில் இருந்து காணமுடியும். அருவியை கண்டு ரசிக்கமுடியுமே தவிர குளிக்கமுடியாது. இதனால் அருவியை காணச்செல்லும் இளைஞர்கள் அருவிக்கு மிக அருகே சென்று செல்பி எடுப்பது, புகைப்படம் எடுப்பது என தங்கள் வீரதீர செயல்களை காட்டுவது வழக்கம்.
அருவியின் மேற்பரப்பு பாறையாக உள்ளதால் அருவியில் விழும் தண்ணீர் தெறித்துவிழுந்து வழுக்கு பாறையாக மாறியுள்ளது. இதை அறியாமல் பாறையில் இறங்கி அருவியை நெருங்கிச்சென்று புகைப்படம் எடுக்கும் போது தான் ஆபத்தை சந்திக்கின்றனர்.
ஐந்தாவது நாளாக உடலை தேடும் பணி: இதுபோன்று தான் கடந்த 3 ம் தேதி பரமக்குடியை சேர்ந்த இளைஞர் அஜய்பாண்டியன் (28), தனது நண்பர் கல்யாணசுந்தரத்தை வீடியோ எடுக்கசொல்லிவிட்டு அருவிக்கு அருகே பாறைப்பகுதிக்கு சென்று போஸ் கொடுத்துள்ளார். இதில் அவர் தவறி 500 அடி பள்ளத்தில் விழுந்தார். கடந்த ஐந்து நாட்களாக தவறி விழுந்த இளைஞரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அருவியை ஒட்டியுள்ள 500 அடி பள்ளத்தில் தேடுவது சிரமம் என்பதால், இளைஞரை தண்ணீர் அடித்துச்சென்று அப்பகுதியில் இருந்து வெளியேற்றினால் தான் மீட்கமுடியும். இதனால் அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் செல்லும் பாதையில் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
புல்லாவெளி அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் திண்டுக்கல் நகர் பகுதியின் குடிநீர் ஆதாரமான ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கு சென்றடைகிறது. இதனால் அருவி முதல் ஆத்தூர் நீர்த்தேக்கம் வரை தண்ணீர் செல்லும் பாதையில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 பேரை காவு வாங்கிய அருவி: புல்லாவெளி அருவியில் இதுவரை 14 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதில் இருவரது உடல் மீட்கப்படவேயில்லை. மற்றவர்களின் உடல் சிதைந்த நிலையில் தான் மீட்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து நாட்களுக்கு முன்பு தவறி விழுந்த அஜய்பாண்டியன் நிலை என்னவென்று தெரியவில்லை. ஐந்து நாட்களுக்கு மேலாகியும் கண்டறியமுடியாததால் அவர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர். இந்த அருவியில் தவறி விழுந்தவர்கள் இதுவரை யாரும் உயிர்பிழைத்ததில்லை.
ஆபத்து மிகுந்த புல்லாவெளி அருவி பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அருவிக்கு அருகில் செல்ல முடியாத அளவில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவேண்டும். தூரத்தில் இருந்து 500 அடி பள்ளத்தில் விழும் அருவியின் இயற்கை எழிலை ரசிக்க மட்டுமே அனுமதித்தால் வருங்காலத்தில் உயிரிழப்புக்களை தவிர்க்கலாம்.